உலகக் கிண்ண கால்பந்து: வெற்றியுடன் விடைபெற்ற அணி தலைவர்
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாம் இடத்திற்கான போட்டி கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (17) இரவு நடைபெற்றது.

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் மூன்றாம் இடத்திற்கான போட்டி கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று (17) இரவு நடைபெற்றது.
இந்த மூன்றாம் இடத்திற்கான போட்டியில் மொராக்கோ மற்றும் குரோஷியா அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை குரோஷியா அணி வீழ்த்தியது. இதன்மூலம் கத்தார் 2022 FIFA உலகக் கிண்ணப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை குரோஷியா வென்றெடுத்தது.
1998இல் தனது முதலாவது உலகக் கிண்ண பிரவேசத்தில் 3ஆம் இடத்தைப் பெற்ற குரோஏஷியா இப்போது மீண்டும் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதேவேளை இந்த வெற்றியுடன் குரோஷியா அணித் தலைவர் லூக்கா மொட்ரிச் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்திலிருந்து விடை பெற்றுள்ளார்.
ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் குரோஷியா வீரர் ஜோஸ்கோ குவார்டியோல் தமது அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார்.
இதனையடுத்து 9வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் அக்ரஃப் தாரி ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலை பெற்றது. இதையடுத்து 42வது நிமிடத்தில் குரோஷியா வீரர் மிஸ்லாவ் ஒர்சிக் தமது அணிக்கான 2வது கோலை அடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்ட முடிவில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் குரோஷியா தடுப்பாட்டத்தில் தீவிரம் காட்ட எந்த அணியும் கோல் எதுவும் அடிக்கவில்லை. மேலும், கூடுதல் நேர ஆட்ட முடிவிலும் கோல் வாய்ப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
இதனால் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற குரோஷியா இந்த உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இதேவேளை இன்று(18) இலங்கை நேரப்படி இரவு 8.30 மணிக்கு உலகக்கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளன.