640 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் நாளை மீள ஆரம்பம்
அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளில், மூன்று மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகளைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (16) வழமை போல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ இதனை உறுதிப்படுத்தியதுடன், ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அமைந்துள்ள 640 பாடசாலைகள் மட்டும் நாளைய தினம் திறக்கப்படாது எனத் தெரிவித்தார். அந்தப் பகுதிகளில் அனர்த்த நிலை முழுமையாக சீரடையாத காரணத்தால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, மேல், வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை முதல் வழமைபோல் நடைபெறும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை துப்புரவு செய்வது மற்றும் தேவையான புனரமைப்புப் பணிகளை விரைவாக மேற்கொள்வது குறித்தும் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.