அரச வீடமைப்பு வீடுகள் 869 பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச வீடமைப்பு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனவே, 40 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமோ அல்லது வேறு அரச நிறுவனமோ இதுபோன்ற கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தி முறையான தொழில்நுட்ப அறிக்கையை பெற்றுக் கொள்வதற்கு என எதிர்பார்க்கப்படுகிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எஸ்.சத்யானந்தா தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப அறிக்கையின் பரிந்துரைகளின்படி வீடமைப்புத் தொகுதிகள் மீள் அபிவிருத்தி அல்லது மேம்படுத்தல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேகந்த வீடமைப்புத் திட்டம், பம்பலப்பிட்டி வீடமைப்புத் திட்டம், வேல்ஸ் குமார மாவத்தை வீடமைப்புத் திட்டம், சிறிதம்ம மாவத்தை வீடமைப்புத் திட்டம், கம்கருபுர வீடமைப்புத் திட்டம், மாளிகாவத்தை வீடமைப்புத் திட்டங்கள், மிகிந்து மாவத்தை வீடமைப்புத் திட்டம் ஆகியவற்றில் சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.