தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய், மகன்... சிக்கியது எப்படி?

அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார்.

தந்தையை கொலை செய்துவிட்டு  நாடகமாடிய தாய், மகன்... சிக்கியது எப்படி?

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள பரைப்பூரை சேர்ந்தவர் உஜ்வால் சக்கரவர்த்தி. இவர் முன்னாள் கடற்படை வீரர் ஆவார். இவருக்கு மனைவி, மகன் என இருவர் உள்ளனர். 

இந்நிலையில், கடந்த 15 ஆம் தேதியன்று பரைப்பூர் காவல்நிலையத்தில் உஜ்வால் காணவில்லை என அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். 

இதையடுத்து, இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தாயும் மகனும் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 

இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தந்தையை தான் கொலை செய்ததாக மகன் ஒப்புக்கொண்டார். 

உஜ்வால் சக்கரவர்த்தி தனது மனைவியையும் மகனையும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தனது பாலிடெக்னிக் படிப்பிற்காக 3 ஆயிரம் ரூபாய் தரும்படி மகன் தனது தந்தையான உஜ்வாலிடம் கேட்டதற்கு, அதை, அவர் தர மறுத்தார். 

இதனால், இவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆத்திரமடைந்த மகன் தனது தந்தையை கீழே தள்ளிவிட்டதில், நாற்காலி மீது மோதி உஜ்வால் சக்கரவர்த்தி மயக்கம் அடைந்தார்.

பிறகு மகன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். என்ன செய்வது என்று அறியாத மகன், தாயிடம் கூற, இருவரும் சேர்ந்து சக்கரவர்த்தியின் உடலை கழிவறைக்கு எடுத்து சென்று 6 ஆறு துண்டுகளாக வெட்டினர். 

வெட்டிய உடல் பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து சென்று, வீட்டின் அருகே உள்ள குளம், குப்பை கிடங்கு என ஆங்காங்கே வீசினர். இவ்வாறு விசாரணையில் மகனும் தாயும் தெரிவித்தாக காவல்துறையினர் கூறியுள்ளனர். 

விசாரணையை அடுத்து நேற்று முன்தினம் தாயையும் மகனையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேர தேடுதலுக்கு பின் உஜ்வால் சக்கரவர்த்தியின் 2 கால்கள், தலை வயிற்றுப்பகுதி ஆகியவை மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீதம் இருக்கும் உடல் பாகங்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே, தில்லியில் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டிய காதலன் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இந்தச் சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.