உலக முடிவு தீர்க்கதரிசனம் கூறியதாக வைரலான நபர் கைது; அவர் தொடர்பில் வெளியான தகவல்!
கைது செய்யப்பட்டவர் மதத் தலைவர் அல்ல என்றும், மூக ஊடகங்களில் தீர்க்கதரிசி போல நடித்து வந்த ஒரு சாதாரண பாதுகாப்பு ஊழியர் என்றும் கானா பொலிஸார் கூறுகின்றனர்.
உலகத்தை முழுவதும் அழிக்கும் பேரழிவு ஏற்படும் என சமூக ஊடகங்களில் வைரலான தீர்க்கதரிசனத்தை பரப்பி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய கானா நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் மதத் தலைவர் அல்ல என்றும், மூக ஊடகங்களில் தீர்க்கதரிசி போல நடித்து வந்த ஒரு சாதாரண பாதுகாப்பு ஊழியர் என்றும் கானா பொலிஸார் கூறுகின்றனர்.
எவன்ஸ் எஷுன் என்ற உண்மை பெயரைக் கொண்ட இவர், “எபோ நோவா” என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பிரபலமாக அறியப்பட்டார். உலகம் முழுவதும் பெரும் புயல் அல்லது வெள்ளம் ஏற்பட்டு அனைத்தும் அழியும் என அவர் வெளியிட்ட வீடியோக்கள், கிறிஸ்துமஸ் காலத்திற்கு முன்பு பரவலாகப் பகிரப்பட்டன.
குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு இயக்குநர், தலைமை கண்காணிப்பாளர் சேத் செவோர்னு அளித்த பேட்டியில், “அவர் மதத் தலைவர் அல்ல. அவருக்கு எந்தச் சர்ச்சும் இல்லை. மெடினாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியாளராக வேலை செய்கிறார்” என்று தெரிவித்தார்.
தற்போது அந்த வீடியோக்கள் வெறும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை என சந்தேகநபர் கூறிவருவதாகவும், ஆனால் அதனால் ஏற்பட்ட பொதுப் பதற்றத்தை கருத்தில் கொண்டால் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீர்க்கதரிசனத்தை நம்பி சிலர் கடுமையான முடிவுகளை எடுத்ததாகவும், ஒருவர் லைபீரியாவிலிருந்து கூட பேரழிவில் இருந்து தப்பிக்கலாம் என்ற நம்பிக்கையில் பயணம் செய்ததாகவும் செவோர்னு குறிப்பிட்டார். எதிர்பார்த்த பேரழிவு நடக்காத நிலையில், அது பின்னர் தள்ளிவைக்கப்பட்டதாக சந்தேகநபர் புதிய வீடியோக்களில் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொய்யான தகவல் பரப்பல் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் செயல்கள் தொடர்பான சட்டங்கள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

