இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது… உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தில் டிரம்ப் எச்சரிக்கை

டிரம்ப் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக 20 நிபந்தனைகளைக் கொண்ட உடன்பாட்டை முன்மொழிந்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜெலன்ஸ்கி அதில் பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 29, 2025 - 06:22
இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது…  உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தில் டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைன்-ரஷ்யா இடையே 3 ஆண்டுகளாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இன்று ஃப்ளோரிடாவில் உக்ரைன் அதிபர் வலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்புக்கு முன்பாக, டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், அந்த உரையாடல் “நல்லதும், மிகவும் பயனுள்ளதுமாக” இருந்ததாகவும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக 20 நிபந்தனைகளைக் கொண்ட உடன்பாட்டை முன்மொழிந்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜெலன்ஸ்கி அதில் பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திப்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இப்போது முடிக்க முடியாவிட்டால், இந்தப் போர் எப்போதும் முடியாது. இன்னும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். அதை யாரும் விரும்பவில்லை,” என்று எச்சரித்தார்.

மேலும், “புதின் இந்த முறை அமைதி விஷயத்தில் தீவிரமாக இருப்பதாக நான் நம்புகிறேன். இரு தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புகிறார்கள். நான் ஏற்கனவே எட்டுப் போர்களுக்குத் தீர்வு கண்டுள்ளேன். ஆனால், இது மிகவும் கடினமான ஒன்று,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, டிரம்ப் புதினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்து, பேச்சுவார்த்தைகளைத் தொடரப் போவதாகவும் கூறினார்.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து இராணுவ, பொருளாதார ஆதரவு அளித்து வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கான இந்த முயற்சிகள் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!