'எங்களை குப்பைகளாய் பார்க்கிறார்கள்: நாம் குப்பைகளை அகற்றாவிட்டால் நகரம் நாறிவிடும்'

அம்மா குப்பையள்ளுறவ என்டதால எங்களோட கதைக்கக்கூட பிள்ளையள் வரமாட்டார்கள் என கூறும் மயூரிகா. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கின்றார். மயூரிகா, அடுத்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளாள். ஆனால் இவளது மனதில் சஞ்சலமாகும் விடயங்களை தீர்ப்பதற்கு யாருமே முன்வருவதில்லை என்ற ஏக்கம் அவளுடன் பேசும்போது தெளிவாகத் தெரிந்தது.

May 30, 2023 - 14:19
'எங்களை குப்பைகளாய் பார்க்கிறார்கள்: நாம் குப்பைகளை அகற்றாவிட்டால் நகரம் நாறிவிடும்'

'அம்மாவை குப்பை வண்டிலோட பார்த்தா பிறகு பிள்ளையள் எங்களோட சேரினம் இல்லை- நாங்க படிச்சு அரசாங்க உத்தியோகம் வந்தா பிறகு அம்மாவை வேலையால நிப்பாட்டுவம்'                          

'தீண்டத்தகாதவர்களைப் போலவே பார்ப்பார்கள்-நாங்கள் என்ன பொய், களவு செய்தா உழைக்கின்றோம்'

'மகள் பள்ளிக்கூடம் போறதுக்கு கொப்பி கேட்டவள்-வேண்டிக்கொடுக்க முடியாத நிலையில வேலைக்கு வந்திட்டன்-கொப்பி இல்லாட்டி பள்ளிக்கூடம் போகமாட்டாள்'

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில், கழிவு நீர் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்திருந்ததாக, கடந்த மாத இறுதியில் இணைய ஊடகமொன்றில் செய்தியொன்றைப் பார்க்க நேர்ந்தது. வவுனியாவிலும் 2019ஆம் ஆண்டு சுத்திகரிப்புப் பணியாளர்கள் மூவர் சுத்திகரிப்புப் பணியின் போது உயிரிழந்திருந்தனர். இலங்கையில் சுத்திகரிப்புப் பணியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் போதிய அறிவூட்டல்கள் கரிசனை இல்லாத நிலைமை காணப்படுகிறது.

சுத்திகரிப்புப் பணியென்பது நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றங்களை அடிப்படையாக வைத்து இடம்பெறுவதால், உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுக்கான சேவை வழங்கும் நிறுவனங்கள் என்ற அடிப்படையில், சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் பாதுகாப்பை சரிவரக் கையாள்கின்றனரா என்பது ஆராயப்பட வேண்டியவொன்று. சட்டங்கள் மற்றும் சபைத் தீர்மானங்களின் பிரகாரம் சுகாதாரத் தொழிலாளர்கள் மீது கரிசனைகொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும், அவை செயற்பாட்டு ரீதியில் மிக மந்த கதியிலேயே காணப்படுகின்றது. கல்வியறிவு, சமூக அந்தஸ்து ஆகிய நிலைகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள ஒரு மக்கட் குழுவே சுத்தகரிப்புத் தொழிலாளர்களாவர். பிற மனிதர்களுக்காகத் தமது கரங்களை அழுக்காக்குவதற்குப் பின் பொதிந்துள்ள வலி பொருந்திய கதைகளோ ஏராளம் காணப்படுகின்றன.

2019ம் ஆண்டு வவுனியா நகர சபையின் கொல்களம் (மாடுகள் வெட்டப்படும் இடம்) ஒன்றில், இரத்தம் மற்றும் கழிவுகள் விடப்படும் குழியொன்றை சுத்தப்படுத்தும் நோக்கில், அந்த குழியினுள் இறங்கிய தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவர் என மயக்கமுற்று வீழ்ந்தனர். அவ்வாறு நால்வர் அக்குழியினுள் வீழ்ந்தநிலையில், அவர்கள் மிகுந்த பிரயத்தனத்தின் பின் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதைப்போன்றதொரு சம்பவம் கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட கொட்டாஞ்சேனைப் பகுதியில் இடம்பெற்றது. கழிவு நீர் வெளியேற்றும் குழியொன்றை சுத்திகரிப்பு செய்தபோது இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காலத்திற்குக்; காலம் சுத்திகரிப்புப் பணியாளர்கள் அனர்த்தங்களுக்கு முகங்கொடுக்கின்ற நிலையில், கொழும்பில் கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் உயிரிழந்தமை தொடர்பில், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயராகப் பதவி வகித்த, அல்ஹாஜ் எம்.சீ.எம்.இக்பாலுடன் பேசியபோது, 'கொழும்பு கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் எமது மாநகர சபையின்  நிரந்தர தொழிலாளி மற்றையவர்  நிரந்தரமாக்கப்படாதவர்' என்றவாறு அன்றைய விபத்துச் சம்பவங்களின் பின்னணிகளை விளக்கியிருந்தார்.

சுத்திகரிப்பு பணி என்பது ஏலவே கூறியதைப்போன்று, நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டாலும், சுத்திகரிப்புப் பணியைச் செய்பவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படுத்தப்படாது, அவர்களது விருப்பு வெறுப்புக்களும், கள அனுபவங்களும் கருத்திற்கொள்ளப்படாது சட்டங்களின் மூலம் அவர்கள் ஆளப்படுகின்றனர். இதனால்தான் அசம்பாவிதங்கள் நேர்கின்றன என்பதை களரீதியான பயணங்களின்போது உறுதிப்படுத்தக் கூடியவைகளாக உள்ளது.
சாதி மற்றும் பொருளாதார நலிவுகளைக் காரணங்காட்டி குரலற்றவர்களாக அந்த தொழிற்துறையினரை வஞ்சிக்கின்றனர். இதனால் தற்போது சுத்திகரிப்புத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மாத்திரமல்ல, அவர்களது சந்ததியும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது. இதற்கு நீதியான மனிதாபிமான தீர்வொன்று மிக மிக அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. அப்படியான தீர்வொன்றை எட்ட முடியாவிடின், அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலமும் சூனியமாக்கப்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுகின்றது. இதற்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்புக்கூற தயாராக வேண்டும்.

'எனது மகள் இன்றைக்குப் பள்ளிக்கூடம் போவதென்றால், தனக்கு அப்பியாசக் கொப்பிகள் அவசியம் என நான் 5.30 மணிக்கு பஸ் எடுப்பதற்காக தயாராகும்போதே கேட்க ஆரம்பித்து விட்டாள். வாங்கிக்கொடுக்க முடியாத கையறு நிலையில் காணப்படுகிறேன். அப்பியாசக் கொப்பிகளை எனது மனைவி வாங்கிக் கொடுத்தாரோ தெரியாது, வாங்கிக்கொடுத்திருக்காவிட்;டால் பாடசாலைக்கு போகாமல்தான் மகள் விட்டிருப்பாள்' என்றவாறே வீதியில் இருந்த குப்பைகளை அகற்றி, குப்பை வண்டிகளில் போட்டுக்கொண்டிருந்தார் மருதலிங்கம்.

மருதலிங்கம் (அவரது வேண்டுகோளின் அடிப்படையில் பெயர் மாற்றப்பட்டுள்ளது) அம்பாறை கல்முனை மாநகர சபையில் 15 வருடங்களாக சுத்திகரிப்புத் தொழிலாளியாக பணியாற்றுகின்றார். மகளுக்கு அப்பியாசக் கொப்பியை கேட்டவுடன் வாங்கிக்கொடுக்க முடியாத மருதலிங்கம், தனது சுத்திகரிப்புப் பணிக்காக தினந்தோறும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலிருந்து இரு நூறு ரூபாய் பேருந்துக் கட்டணத்திற்கும், உணவுக்காக 250 ரூபாய் என 450 ரூபாய்களை செலவு செய்கிறார். 

நண்பர்களை இழக்கின்றேன்- 'நான் சுத்திகரிப்புத் தொழிலாளியின் மகள்'

அம்மா குப்பையள்ளுறவ என்டதால எங்களோட கதைக்கக்கூட பிள்ளையள் வரமாட்டார்கள் என கூறும் மயூரிகா. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கின்றார். மயூரிகா, அடுத்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளாள். ஆனால் இவளது மனதில் சஞ்சலமாகும் விடயங்களை தீர்ப்பதற்கு யாருமே முன்வருவதில்லை என்ற ஏக்கம் அவளுடன் பேசும்போது தெளிவாகத் தெரிந்தது.

யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த மகேஸ்வரி யாழ்ப்பாணம் மாநகர சபையில் கழிவகற்றல் தொழிலில் 11 வருடங்களாக பணிபுரிகின்றார். இவருக்கு 3 பிள்ளைகள். முதலாவது மயூரிகா. ஏனையவர்கள் 6 மற்றும் 5ம் தரங்களில் கல்வி கற்கின்றனர். சமூகத்தை புரிந்துகொள்ளக் கூடிய ஆற்றல் அவர்களுக்கு இல்லை.

'பேரன்ட்ஸ் மீட்டிங் ரைம் அம்மாதான் வரோனும். நாங்கள் கேள்ஸ் என்டதால அப்பா வாறத பெரும்பாலும் ரீச்சர்மார் விரும்புறதில்லை. அம்மா வேலையை விட்டுவிட்டுத்தான் வருவா. அம்மா குப்பை வண்டிலோடை போறத பார்த்த என்னோட படிக்கிற பிள்ளையள், அம்மா கிளாசுக்கு வந்து ரீச்சரோட கதைச்சா பிறகு என்னோட கதைக்கிறத குறைச்சிட்டினம். ஆனாலும் ரீச்சர்மார் தாற வேலைகளை நான் சரிவர செய்வன். நாங்கள் படிச்சு ஒரு அரசாங்க வேலைக்கு வந்திற்றம் என்றால் அம்மாவையும் வேலையால நிப்பாட்டலாம்' என சமூகத்தை கற்றறிந்த சுத்திகரிப்புத் தொழிலாழியொருவரின் மகள் கூறி நின்றாள்.

விளிம்புநிலை மக்கள் குழுமத்தை சமகாலப் பொருளாதார நெருக்கடி தாக்கிநிற்கும் சமதளத்தில் அவர்களை இந்த சமூகம் ஒதுக்கும் நிலையும் காணப்படுகிறது. வயது வித்தியாசம் ஏதுமின்றி வர்க்க ரீதியான வேறுபாடுகள் அடிமட்ட சமூகங்களில் ஆழ வேரூன்றியுள்ளன. 

வெள்ளவத்தையில் இருந்து துவிச்சக்கர வண்டி மூலம் கொழும்பு மாநகர சபைக்குச் சென்று, கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தனக்கு தரப்பட்ட சுத்திகரிப்பு பணிகளை முன்னெடுக்கின்றார் காமினி. இவருக்கு இரண்டு மகள்கள். ஒருவர் திருமணம் முடித்து விட்டார். ஆனால் மகளின் கணவன் உடல்ரீதியாக வலுவிழந்த ஒருவராக இருக்கின்றார். இரண்டாவது மகள் கொழும்பில் உள்ள உயர்தரப் பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கின்றார். தனது மூத்த மகள் திருமணம் செய்த பின்னரே தான் மிகவும் கஸ்டமான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கிறார் காமினி. 

'நாங்கள் நிரந்தர ஊழியர் என்றால் அரச உத்தியோகம் என வரையறுக்கின்றனர். ஆனால் எங்களுடைய கஸ்டங்கள் பரந்துபட்டது' என்கிறார் அம்பாறை வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த சுத்திகரிப்புத் தொழிலாளியான கோபால். 

'ஒழுங்கான வீடு இல்லை. வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பித்தால் அரசாங்க உத்தியோகம் என காரணம் கூறுகின்றனர். எங்களுடைய வீட்டில் மலசலகூடம் இல்லை. அம்மா வீட்டிலுள்ள மலசல கூடத்தையே பயன்படுத்துகின்றோம். மலசல கூடத் திட்டங்கள் எங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கு வருகிறது. ஆனால் எமக்கு கிடைப்பதில்லை. நாங்கள் மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என அர்ப்பணிப்போடு பணியாற்றுகின்றோம். எங்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடர்பில் யாரும் சிந்திப்பதில்லை. அரச ஊழியம் வரையறுப்பதால், வறுமை நிலைமைகளைக் கருத்திற்கொள்ள மறுக்கின்றனர்;'என்றும் அவர் தெரிவித்தார். 

இலங்கையில் அரசாங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வீட்டுத் திட்டங்கள், அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதில்லை. சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டு, அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதால், அவர்களும் அரச ஊழியர்களாகவே கருதப்படுகின்றனர். உண்மையில், சுத்திகரிப்புப் பணிகளுக்குச் செல்வோர் மிகவும் நலிந்த குடும்பப் பின்னணி உடையவர்களாகவே இருப்பர். அவர்கள் அரச ஊழியர்கள் என்ற வரையறைக்குள், சலுகைகள் புறக்கணிக்கப்பட்டவர்களாக மாறுவது, மேலும் மேலும் நலிவடைந்த மக்கள் குழுமமாகவே அவர்களை மாற்றுகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச வழங்கிய வீட்டுத் திட்டத்தில் வதியும் இஸ்மாயில், கொழும்பு மாநகர சபையின் சுத்திகரிப்புப் பணியைப் பொறுப்பெடுத்திருக்கும் தனியார் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். பொருளாதர நெருக்கடிமிக்க சூழலில் கிடைக்கும் நாளாந்த ஊதியத்தொகையை வைத்து குடும்பச் செலவுகளை ஈடுகட்டுவதில் சவால்கள் ஏற்படுவதாகவும், வங்கிக் கடன் எடுக்கச்சென்றால், தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று தனக்கு வங்கிக் கடனும் கிடைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் தனது வேதனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

இலங்கையில் அதிகூடிய வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்ற மாநகர சபை கொழும்பு மாநகர சபையே. கொழும்பு மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வருமானமாக 1785 கோடியே 49 இலட்சத்து 91000 ரூபா வரவு செலவுத் திட்டத்தில் கணிப்பிடப்பட்டிருந்தது. செலவீனமாக 1785 கோடியே 40 இலட்சத்து 87350 ரூபா  கணிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரவு-செலவுத் திட்டத்தில் மாநகர சபையின் மக்கள் சுகாதார திணைக்களத்தின் கீழ் காணப்படும் 7 பிரிவுகளுக்காக 754.94 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு இத்தனை கரிசனை காட்டப்படுகின்றபோதும் கொழும்பில் சுத்திகரிப்புப் பணியொன்பது தனியாருடன் பகிர்ந்தே மேற்கொள்ளப்படுகின்றது என மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் கூறியிருந்தார்.
 

இதனால் தனியார் ஊழியர் படையொன்று கொழும்பு மாநகர சபையைச் சுற்றிக் காணப்படுகிறது. ஆனால் அவர்கள் மாநகர சபையோடு நேரடியாகத் தொடர்புபட்டவர்கள் அல்லர் இருந்தபோதும் அவர்கள் மாநகர சபைக்காக மறைமுகமாக உழைக்கின்றனர் என்பதே உண்மை.

எனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் வங்கிக் கடன் எடுத்திருப்பதால் அதை வெட்டிய பின்னர் 15ஆயிரம் ரூபாவே மாத ஊதியமாக கிடைக்கின்றது என பொருளாதாரச் சுமை நசுக்கிப்போட்ட வேதனை படர்ந்த முகத்தோடு பேசிய நேசராஜா, பிள்ளைகளுக்குத் தேiவாயான அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் உயர்ந்ததால், பெரும் செலவை, முதலாம் தவணைக் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்தபோது செய்ததாகவும். எஞ்சிய சொற்பளவான சம்பளத்தில் உணவு மற்றும் ஏனைய செலவுகளையும் தான் ஈடுகட்டியதாகவும் கூறினார். சில நேரங்களில் குடும்பக் கஸ்டத்தைப் போக்க சுத்திகரிப்புப் பணி முடிந்ததும் நாட் கூலிக்குக்குச் செல்ல நேரிடுகிறது என்றும் கூறினார். 

பிள்ளைகளின் கற்றல் தேவைக்கு யாரும் உதவிகளை வழங்குகின்றனரா? என இவரிடம் வினவியபோது, சில நேரம் சில நிறுவனங்கள் வழங்குவார்கள் என பெருமூச்சோடு பதிலளித்தார். அந்தப் பெருமூச்சு அவரது கஸ்டங்களுக்கான தீர்வுகள் இடையிடையே கிடைப்பது போலவே, ஒரு கட்டமைப்பாகக் கிடைத்தால் பயனளிக்கும் என்பதாகப்பட்டது.

1996ம் ஆண்டு சுத்திகரிப்புப் பணியாளராக யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சென்று, 1997ம் ஆண்டு நிரந்தர தொழிலாளியாக்கப்பட்டு, யுத்தம், சுனாமி, கொரோனா, பொருளாதார இடர் என பலவற்றிற்கும் முகங்கொடுத்த ஒரு பெண் சுத்திகரிப்புத் தொழிலாளியாக உள்ளார் ஆச்சிமுத்து. மக்கள் எங்களைத் தீண்டத்தாகாதவர்களாகவே பார்க்கின்றனர். ஆனால் நாங்கள் பொய் சொல்லாது, களவு எடுக்காது எங்களுடைய பணிகளை மாத்திரம் செய்கின்றோம். எங்களுடைய சுப்பஓபிசர்ஸ் (கண்காணிப்பாளர்கள்) கூட எம்மை தூற்றுவார்கள். தங்களது மனங்களில் ஏற்படும் கஸ்டங்களை எல்லாம் எங்கள் மீதுதான் கொட்டுவார்கள் (சுமத்துவார்கள்). மனதைக் காயப்படுத்தினால் சிலவேளை திருப்பிப் பேசிவிடுவேன். பெரும்பாலான நேரங்களில் அப்படி பேசத் தோன்றினாலும இது வழமை என கடந்து விடுவேன்.  6 மணிக்கு வேலைக்குப் போகவேண்டும். 1 மணிக்கு வேலை முடியும். முன்னர் 12 மணிக்கு வேலை முடிந்தால் ஏதும் கூலி வேலைகளுக்கு போக வாய்ப்புக் கிடைக்கும் இப்போது அப்படிக் கிடைப்பதில்லை என்று கூறிய அவர், தொழிலாளர்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் சந்தாப் பணத்தை குறித்த நேரத்திற்கு வாங்கும் வேகத்திற்கு, தொழிலாளர்களுக்கான நலன்கள் தொடர்பில் சிந்திப்பதில்லை என்ற மனக்குறையையும் பகிர்ந்துகொண்டார்.

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பெண் சுத்திகரிப்புத் தொழிலாளி எமக்குத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டபோது. இங்கே வெற்றிடங்கள் நிறைய இருக்கின்றன. அவை நிரப்பப் படவேண்டும். ஆணையாளர்கள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். உரிய ஆளணியின்றித்தான் கழிவகற்றல் இடம்பெறுகின்றது. மேயரால் ஆளணி நியமனங்களை செய்யவே முடியாது என தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை எளிதாக ஆணையாளர் மீது சாடினார்.

தங்களுடைய ஆட்சிக் காலத்தில் மட்;டக்களப்பு மாநகர சபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்களி;ன் தேவைகளை முடிந்தவரை பூர்த்தி செய்ததாகக் கூறிய மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தொழிலாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முதற்கொண்டு சுத்திகரிப்பு இயந்திர வளங்களையும் அதிகரித்தாக கூறினார்.

அத்தோடு சுத்திகரிப்புத் தொழிலாளிகளின் பிள்ளைகள் க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியெய்தி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால் மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா கல்வி ஊக்குவிப்புத் தொகையையும், கிழக்கு மாகாணத்திற்கு அப்பாலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுவோருக்கு 8 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் ஊக்குவிப்புத் தொகையினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.
சுத்திகரிப்புத் தொழிலாளிகளின் ஆளணி மட்டக்களப்பில் அதிகரிக்கப்பட வேண்டும் என கூறிய முன்னாள் முதல்வர். கோட்டாபய ராஜபக்ச 1 இலட்சம் வேலைவாய்ப்பு என்ற ரீதியில் முறையற்ற நியமனங்களை வழங்க முன்வந்த போது எதிர்ப்புக்களை வெளியிட்டதாகவும், அதற்கு காரணம் ஏற்கனவே 105 தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்படாது இருக்கும் நிலையில், அவர்கள் அல்லாத வேறொரு தரப்பைக்கொண்டு, ஆளணியை நிரப்புதல் பொருத்தமற்ற செயற்பாடு என்றும் விளக்கினார்.
கொழும்பு மாநகர சபையும் தமக்கு கீழ் பணிபுரியும் சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு இந்த பொருளாதார இடர்பாடுகளின் போது கடன் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது என மாநகர முன்னாள் பிரதி மேயர் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூராட்;சி மன்றங்களின் தலையாய சபைகள் என வர்ணிக்கப்படும் மாநகர சபைகளில் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் கஸ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பதற்கு அரசாங்கங்களும் உள்ளூராட்சி அமைச்சும் உரிய தீர்வினைக் காணவேண்டும். அவர்கள் காணும் தீர்வே ஏனையநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு ஓர் முன்னுதாரணத்தை எளிதில் கொண்டு செல்லும்.
மட்டக்களப்பு மாநகர சபையில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பில் காட்டப்படும் அக்கறையும், கொழும்பு மாநகர சபையில் சுத்திகரிப்புத் தொழிலாளிகளுக்கு பொருளாதார இக்கட்டில் கடன் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டமையும் விசேட கவனத்திற்குட்பட்டவை. இதைப்போன்றே சுத்திகரிப்புத் தொழிலாளர்கள்  அனைவருக்கும் மருத்துவக் காப்பீடும், ஆயுட் காப்பீடும் உள்ளூராட்சி மன்றங்கள் செய்து கொடுக்க வேண்டும். அவற்றால்தான் சுத்திகரிப்புத் தொழிலாளியையும் பாதுகாக்க முடியும். அவரை நம்பியுள்ள குடும்பத்தையும் காக்க முடியும். இதற்காக துறை சார்ந்த அமைச்சர்கள் கொள்கைசார் தீர்மானங்களை எடுக்க வேண்டும். அவை அரசியல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்படாது நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடியனவாக அமைதல் வேண்டும். 

(இ.கீர்த்தனன்)

Mentoring and financial support by Internews


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...