கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன. எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.

May 31, 2023 - 13:47
May 31, 2023 - 14:36
கனவுகள் சிதைக்கப்பட்ட புலம்பெயர் பணிப்பெண்கள்

“பல கனவுகளோடு வானில் முதற்தடவையாக பறந்த என்னுடன், என்னுடைய கனவுகளும் என்னை விட உயரத்தில் பறந்து கொண்டிருந்தன.

அப்பப்பா எத்தனை கனவுகள் முதலில் சொந்தமாக வீடு கட்ட வேண்டும். எனது பிள்ளைகளுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் எவ்வித குறைபாடுமின்றி பூர்த்தி செய்ய வேண்டும். கணவருக்கு சொந்த வியாபாரத்தை ஆரம்பிக்க உதவி செய்ய வேண்டும். இப்படி எத்தனை கனவுகள், எத்தனை ஆசைகள் அத்தனையும் அம்மண்ணில் கால் வைத்து இரண்டொரு மாதங்களில் வெடித்துச் சிதறி, இன்று என் குடும்பத்துக்கு சுமையாய் வாழ்ந்து வருகிறேன்”.

இது இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர் பணிப்பெண்ணாகச்  சென்று பல்வேறு இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் சித்திரவைதைகளுக்கும் உள்ளாகி நாடு திரும்பி, இன்றைய பொருளாதார சிக்கலில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் குடும்பத் தலைவியான விக்னேஸ்வரியின் கதை.

கை, கால்கள் உடைந்த நிலையில்  ஓமானிலிருந்து நாடு திரும்பிய விக்னேஸ்வரி

 3 பிள்ளைகளின் தாயான 40 வயதுடைய  இவர் பதுளை கொள்ளுமண்டி தோட்டத்தைச்- (டொட்லன்ட் டிவிசன்) சேர்ந்தவர்.

இந்த வருடம்  ஜனவரி  மாதம் குருநாகல் பகுதியிலுள்ள முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக   ஓமான் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

அந்த வீட்டில் வீட்டுவேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் தான் ஒருவர் மாத்திரமே செய்து வந்த நிலையில், அந்த வீட்டிலுள்ள 3 சிறுவர்களையும் பராமரிக்கும் பணியும் தனக்கே வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தான் சமையலறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, வீட்டு எஜமானியுடன் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையொன்று நித்திரையில் இருந்து எழும்பி வந்து, குளியலறைக்கு அருகில் வழுக்கி விழுந்துள்ளது.

குழந்தை வழுக்கி விழுந்த மறுகணமே தன்னை இரண்டாவது மாடிக்கு வீட்டு எஜமானி அழைத்து, எதுவும் கூறாமல், கேளாமல் வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே முதலாவது மாடிக்கு தள்ளி விட்டாதாகத் தெரிவித்தார்.

இதனால் தனது கையும், காலும் பலமாக அடிப்பட்டு தான் கதறியதை அடுத்து, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் அங்கு 6 ஊசிகளை தனக்கு ஏற்றியதன்  பின்னர், தன்னை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஒப்படைத்ததாகவும் விக்னேஸ்வரி கண்ணீருடன் தெரிவித்தார்.

அங்கு 20 நாட்கள் தான் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் இதன்போது கடுமையான வலி தனக்கு ஏற்பட்ட போதும் ஓமான் தூதரக அதிகாரிகள் தனக்கு வலி நிவாரணி மாத்திரையைக் கூட வாங்கிக்கொடுக்க முன்வரவில்லை என்றார்.

இந்த நிலையில் மார்ச் மாதம் ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக இலங்கைக்கு வந்து சேர்ந்ததாகவும் தேகாரோக்கியத்துடன் சென்ற தான் கை, கால்கள் முடக்கப்பட்ட நிலையில் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவித்தார்.

தற்போது தனது கை, கால் முறிவிற்காக ஒரு நாளைக்கு 1300 ரூபாய் வீதம்   இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை ஆயுர்வேத மருத்துவத்துக்காக செல்வதாகவும் ஓட்டோவில் சென்று வர ஒரு நாளைக்கு 2500 ரூபாய் செலவாவதாகவும் தெரிவித்தார்.

தன்னை கணவன் பராமரித்து கொள்வதால் அவரும் தொழில் வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் இதனால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன், அன்றாட உணவுக்கே மிகவும் கஸ்டப்படுவதாகத் தெரிவித்தார்.

இவர் மட்டுமல்ல  இப்படி எத்தனையோ பெண்கள் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று தமது எதிர்காலத்தையே சூனியமாக்கிக்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.

இவரைப் போன்று  பணிப்பெண்களாகச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களின் தற்போதைய பொருளாதார நிலை என்ன? அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள், தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன? அவர்களுக்கு அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் எவ்வாறான உதவிகள் கிடைக்கின்றன. என்பது தொடர்பான ஓர் ஆய்வுக்கட்டுரையாக இது அமைகின்றது.

இதற்கமைய, குறித்த தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய, 2009ஆம் ஆண்டு வரை 2019ஆம் ஆண்டு வரையான பத்து வருட காலப்பகுதியில் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமை தொடர்பில் தமது பணியகத்துக்குக்கு மொத்தமாக 11,038 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்து ஆண்டுகளின் அடிப்படையில் முறைப்பாட்டாளர்களின் எண்ணிக்கையை வழங்கியிருந்ததுடன், இதில் அதிகமான முறைப்பாடுகள் பெண்களிடம் இருந்தே கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதேபோல் மத்திய கிழக்கு நாடுகளான டுபாய், குவைட், லெபனான்,  சவுதிஅரேபியா, ஜோர்டான், கட்டார், பஹ்ரென், ஓமான் ஆகிய நாடுகளுக்கு தொழிலுக்காகச் சென்றவர்களே துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அத்தகவல்களில் தெரிவித்திருந்தனர்.

குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி உடல் அவயங்களை இழந்தவர்கள் மாத்திரமல்ல. அதிகமானவர்கள் தொழில் புரியும் போது மரணமடைந்துள்ளதாகவும் அவர்களின் எண்ணிக்கை, அவர்கள் பணிபுரிந்த நாடுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தன.

அதற்கமை 2019ஆம் ஆண்டை மாத்திரம் நாம் எடுத்துக்கொண்டால் சவுதியில் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 43 பேர் மரணித்துள்ளதுடன், குவைட்டில் 30 பேரும், கட்டாரில் 20 பேரும் டுபாயில் 11 பேரும் லெபனானில் 4 பேரும் ஜோர்டானில் 5 பேரும் ஓமானில் மூவரும் என 133 புலம்பெயர் தொழிலாளர்கள் தொழில் புரியும் சந்தர்ப்பங்களில் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 2019ஆம் ஆண்டு மாத்திரம் 103 சடலங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதில் புலம்பெயர் தொழிலாளர்களாக இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தொழில் புரியும் பெரும்பான்மையினரான பெண்களே காணப்படுகின்றனர்.

இப்புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் உழைப்பே அன்று தொடக்கம் இன்று வரை நாட்டின் அந்நிய செலாவணிக்கு பாரிய பங்களிப்பை வழங்குகின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கையை மீட்கும் ஒரு தரப்பினராகவும்  இப்புலம்பெயர் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.

இதற்கமைய கடந்த சில மாதங்களாகவே இலங்கையிலிருந்து மத்திய கிழக்குக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்பாக காணப்படும் வரிசைகள் பறைசாற்றுகின்றன.

எனினும் இவ்வாறு இலங்கையின் பொருளாதாரத்துக்கு  பங்களிப்பை வழங்கும் புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான காப்பீடுகள், நலன்புரி விடயங்கள், அவர்கள் மீதான அரசாங்கத்தின் அக்கறை என்பன மோசமான நிலையிலேயே

காணப்படுகின்றமை வேதனையளிக்கும் விடயமாகவே காணப்படுகின்றது.

இது மற்றுமொரு பெண்ணான ஹமானியாவின் சோகக் கதை

7 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையான ஹமானியா கொட்டகலை –கிரிஸ்லஸ்பாம் பகுதியைச் சேர்ந்தவர். 2013ஆம் தனது 40ஆவது வயதில் ஆண்டு கொழும்பு மாளிகாவத்தை பகுதியிலுள்ள முகவர் நிலையம் ஊடாக   சவுதி நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

அவர் சவுதிக்குச் சென்று இரண்டு மாதங்களில் உயரமான ஏணியொன்றில் ஏறி துப்புரவு பணியை செய்யுமாறு வீட்டின் எஜமான் பணித்த போது, தான் ஏணியில் ஏறி துப்புரவு செய்யும் போது ஏணியிலிருந்து விழுந்து விட்டதாகவும் இதன்போது தனது முதுகுப் பகுதி எலும்பு முறிந்ததைப் போன்று தான் உணர்ந்ததுடன், கடுமையான வலியையும் எதிர்கொண்டதாகத் தெரிவித்தார்.

எனினும் தான் விழுந்ததையும் பொருட்படுத்தாத வீட்டினர் உடனடியாக தன்னை வேலை செய்யுமாறு பணித்த போது, தன்னால் வேலை செய்ய முடியவில்லை. தன்னை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு தான் மன்றாடிய போதும் தன்னை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அறையொன்றில் பூட்டி கடுமையாக தாக்கியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.

அத்துடன் 3 நாட்கள் உண்ண உணவின்றி தான் மலசலக்கூட நீரை அருந்தியதாகவும் பின்னர் அந்த நாட்டில் தன்னை பொறுப்பேற்ற முகவரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.

முகவரிடம் ஒப்படைக்கப்பட்ட தான் அங்கும் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சப்பாத்து கால்கள் அந்த முகவர் தன்னை அடிவயிற்றில் தாக்கி கொடுமைப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

இறுதியில் கொழும்பிலுள்ள முகவருடன் தான் கதைக்க  அப்பெண்ணுக்கு கதைக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் “தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன்“ என தெரிவித்த இலங்கை முகவர், சவுதி முகவரிடம் “ அவளை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என கூறியதாகவும் சவுதி முகவர் அந்த முகவருடன் பேசும் போது அலைபேசியை ஸ்பீக்கரில் போட்ட போது தான் கொழும்பு முகவரின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் அந்த முகவரிடமிருந்து தப்பிச் சென்று சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சமடைந்த போது சுமார் 6 மாதங்கள் தூதரகம் ஊடாக தனக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தான் நாடு திரும்பியதாகவும் தான் நாடு திரும்பிய பின்னர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் தனக்கு 12,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அன்று சவுதியில் தான் கொடூரமாக தாக்கப்பட்டதன் விளைவாக அண்மையில் முதுகில் சத்திரசிகிச்சை ஒன்றை செய்ய நேரிட்டுள்ளதாகவும் இதனால் தான் கடினமான வேலைகளை செய்ய முடியாமல் இருப்பதுடன் தொழில் வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியில் பாரிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாகவும் 50 வயதான ஹமானியா தெரிவித்தார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த சயந்தினி

இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நாடு திரும்பியுள்ள மற்றுமொரு பெண் தான்  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய்  பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் பிரிவின்  50 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும்  நவநீதன் சயந்தினி கூறியவை

2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்று இந்த வருடம் ஜனவரி மாதம் நாடு திரும்பியப் பெண்ணான சயந்தினியின் கணவர் மேசன் தொழில் செய்து வருகிறார்.

தனது கணவரின் உழைப்பு குடும்பத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையில்,தான் டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்றதாகத் தெரிவித்தார்.

எனினும் தான் சென்ற வீட்டில் தனக்கு சரியாக உணவு வழங்கவில்லை என்பதுடன், தான் அங்கு  சென்று ஒரு மாதத்தில் குளிப்பதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.

மேலும் தனது வீட்டாருடன் தொலைபேசியில் கூட உரையாட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அதே வீட்டில் தன்னுடன் தங்கியிருந்த மேலும் இரண்டு பணிப்பெண்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை கண்டு பயந்த தான் அங்கிருந்து தப்பியோடி, டுபாயிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தஞ்சம் புகுந்து, அவர்கள் மூலமாக நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவித்தார்.

நாடு திரும்பி தற்போது மிகவும் மோசமான பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு மொத்தமாக 3 இலட்சத்து 11ஆயிரத்து 56 பேர் பல்வேறு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில், குவைட்டுக்கு 54,998 பெண்களும் சவுதி அரேபியாவுக்கு 26,577 பெண்களும்  டுபாய்க்கு 13,105 பெண்களும் ஓமானுக்கு 7,850 பெண்களும்  ஜோர்டானுக்கு ஆடைத் தொழிற்சாலைகளுக்க 3932 பெண்களும் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரியான சந்தருவன் தெரிவித்தார்.

அத்துடன் பஹ்ரெயின் நாட்டுக்கு 1597 பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும் சென்றுள்ளதாகத் தெரிவித்த அவர், மொத்தமாக கடந்தாண்டு பல நாடுகளுக்கு 74,007 பெண்கள் பணிப்பெண்களாகச் சென்றுள்ளனர் என்றார்.

மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்  சவுதிக்கு 14,321  பெண்கள் தொழில்வாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன்,  குவைட்டுக்கு 12,510 பேரும் பஹ்ரெயினுக்கு 677 பேரும் ஜோர்டானுக்கு 1027 பெண்களும்  ஓமானுக்கு 1384 பெண்களும் டுபாய்க்கு 2980 பெண்களும் தொழில்வாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர் என்றார். 

பழங்குடியினப் பெண்ணான சுவர்ணா மல்காந்தி என்ன சொல்கிறார் என பார்ப்போம்

இந்த வருட ஆரம்பத்தில் இரண்டு வருட கனவுகளுடன் சவுதி மண்ணில் கால்வைத்த மஹியங்கனை- தம்பானை- குரும்கும்பர கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான பழங்குடியினப் பெண்ணான இவர், தான் புரிந்த வீட்டில் செய்யப்பட்ட பல்வேறு உடல், உள ரீதியான  துன்புறுத்தல்கள் காரணமாக இரண்டே மாதத்தில் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஒரு பிள்ளையின் தாயான இவர் கணவனால் கைவிடப்பட்ட பெண். எனவே தனது மகனுக்காகவும் பொருளாதார பிரச்சினையிலிருந்து விடிவைத் தேடி, கொழும்பிலுள்ள முகவர் ஊடாக சவுதி நாட்டுக்கு பயணமாகி, இரண்டு மாதங்களில் நாடு திரும்பியிருந்தாலும் இவரால் வெளியில் சென்று தொழில் செய்ய முடியாத அளவுக்கு இவருக்கு கிராமத்தவர்கள் விபசாரி பட்டம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்து கண்ணீர் வடித்தார்.

தற்போது தனக்கு 3 மாதத்துக்கு ஒரு தடவை கிடைக்கும் 6,000 ரூபாய்  சமுர்த்தி நிதி மூலமாகவே தனது குடும்பத்தைப் பராமரிப்பதாகத் தெரிவித்த இவர், தான் பணிபுரிந்த வீட்டில் தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக நாடு திரும்பியதும்  4 நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்தமைக்கான மருத்துவ சான்றிதழ்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமுர்த்தியைத் தவிர வேறு எந்த உதவியும் கிடைப்பதில்லை எனத் தெரிவித்த அவர், தனது கிராம உத்தியோகத்தர் ஊடாக பதுளை பிரதேச செயலகத்துக்கு காப்புறுதி தொகைக்கான ஆவணங்களை அனுப்பியுள்ளதாகவும் இதுவரை காப்புறுதி பணமும் கிடைக்கவில்லை என்றார்.

இதேவேளை தன் மீதான கிராமத்தவர்களின் பார்வை கீழ்நிலையில் இருப்பதால்  தன்னை தாய் தொழிலுக்கு அனுப்புவதில்லை என்றும் தாய் வாராந்த சந்தைக்கு தொழிலுக்குச் சென்று கொண்டு வரும் சொற்ப பணத்திலேயே தனது குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.

மஸ்கெலியா- குயின்ஸ்லேன்ட் தோட்டத்தைச்  சேர்ந்த 50 வயதான ஜெயலட்சுமி

தான் 97ஆம் ஆண்டு 23 வயதில் ஜோர்டான் நாட்டுக்கு பணிப்பெண்ணாகச் சென்று அங்கு வீடொன்றில் உயரமான யன்னல்களை கழுவிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து விட்டதாகத் தெரிவித்தார். இதனால் தனது கால்கள் இரண்டும் மறுத்துப் போனதால் 11 நாட்கள் அங்குள்ள வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டு  3 மாதத்தில் இலங்கைக்கு திரும்பி அனுப்பிவிட்டதாகத்  தெரிவித்தார்.

தற்போது 27 வருடங்களாக தனது கால்கள் முழுமையாக செயலிழந்து உள்ளதால் சக்கர நாட்காலியின் உதவியுடனேயே தன்னுடைய அன்றாட பணிகளை செய்து வருவதாகவும் தான் வெளிநாடு செல்லும் முன் மருத்துவ காப்பீடை பெறவில்லை என்பதால் தனது கால்களை சுகப்படுத்துவதற்கான வழி கிடைக்காமல் முழுமையாக முடங்கிப் போயுள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டு நாடு திரும்பிய பெண்களுக்கு அவர்கள் பணி செய்த  வீடுகளை விட அதிக கொடுமைகளை, அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் அனுபவிப்பதாக பலர் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இதேவேளை ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பாக இந்த மாதம் 8ஆம் திகதி தொடக்கம் இரண்டு வாரகாலமாக 72 இலங்கைப் பணிப்பெண்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அதாவது தாம் பணிபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கும் இப்பெண்கள் தம்மை உடனடியாக இலங்கைக்கு அனுப்புமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்நாட்டு பொலிஸாரினால் அழைத்துச்செல்லப்பட்டதுடன், விசாரணைகளின் பின்னர் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்படுவர் என இலங்கை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

 இந்த நிலையில்,  புலம்பெயர் பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்புரி விடயங்களில் தலையீடு செய்யவும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் இலங்கையில் செயற்படும் சில அரசசார்பற்ற நிறுவனங்களின் கருத்துகள் வருமாறு,

 வீட்டு வேலை தொழிலாளர் சங்கத்தின் தலைவி சரசகோபால் சத்தியவாணி

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக தமது சங்கம் உள் நாட்டு  வீட்டு வேலைத் தொழிலாளர்களின் நலனுக்காக செயற்பட்டாலும் அண்மை சில நாட்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாகவும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகத் தெரிவித்தார்.

இதற்கமைய மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்கள் தொடர்பான 10 முறைப்பாடுகள் அண்மையில் கிடைக்கப்பெற்றதாகவும் தெரிவித்தார்.

பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு  செல்வதற்கு முன்னர், தமது சங்கத்திடம் தகவல்களை வழங்கிச்  சென்றால் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயலாம் என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், முகவர்களுக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் அந்நிய செலாவணியை மனதில் வைத்து பணிப்பெண்களின் நலன்களுக்காக செயற்படுவதில்லை என்றும் இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் கூட இருப்பதாகத் தெரிவித்தார்.

எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கண் கெட்ட பின்னர் சூரியநமஸ்காரம் செய்யாமல் பிரச்சினைகள் ஏற்பட்டவுடனேயே அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது நல்லது என்றார்.                                  

கொழும்பை தலைமையகமாக கொண்டு இயங்கும் Voice of migration network அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டில்சானி தெரிவிக்கையில்,

சிவில் அமைப்புகள் 27, தொழிற்சங்கங்கள் 5 இணைந்த 31 அமைப்புகள் Voice of migration network அமைப்புடன் இணைந்துள்ளது என்றார்.

2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பானது,புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களின் குடும்ப உறவினர்களின் நலனுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது.

20 மாவட்டங்களில் இந்த வலையமைப்பு செயற்படுவதுடன்,   8 மாவட்டங்களில் 420 இடம்பெயர்வு சமூக அமைப்புகள் உள்ளதென்றும் இதில் 6,000 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதாகவும் தெரிவித்தார்.

புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று நாடு திரும்பியவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இணைந்து உருவாக்கிய இந்த 31 அமைப்புகளும் ஒன்றொன்றும் ஒவ்வொரு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக புலம்பெயர் பணியாளர்களாக செல்வோருக்கான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுத்தல், அவர்களுக்கான தெளிவூட்டல்களை வழங்குதல் என்பன தமது அமைப்பின் பிரதான கடமை என தெரிவித்த அவர், புலம்பெயர் பணிப்பெண்களாகச் சென்று பாதிப்புக்குள்ளான பெண்களின் தனிபட்ட முறைப்பாடுகளை கையாள்வது குறைவு. ஆனால் அதற்காக தனித்தனியான அமைப்புகள் உள்ளன என்றார்.

அதேபோல் மட்டக்களப்பு மாவட்டத்தில் Voice of migration network அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வரும் ESCO அமைப்பின் திட்ட முகாமையாளர் உதயந்திரனிடம் அந்த அமைப்பின் பணிகள் குறித்து வினவியபோது.

புலம்பெயர் தொழிலாளர்களாக செல்பவர்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது இந்த அமைப்பின்  பிரதான செயற்பாடு என்பதுடன், பாதுகாப்பாக எவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வது ?அரசாங்கத்திடம் இது தொடர்பில் காணப்படும் திட்டங்கள் என்ன என்பது குறித்து தெளிவூட்டல்களை தமது அமைப்பு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழில்களுக்குச் செல்லும் பெண்கள் ஏதேனும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் போது, அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்குதல், நாடு திரும்பியவர்கள் சுயதொழில்களை முன்னெடுப்பதற்கான சில நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவி செய்வதாகவும் தெரிவித்தார்.

தமது நிறுவனம் மட்டகளப்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை காரியாலயம் ஊடாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் துன்புறுத்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் அறிவித்தால் அந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகளை தமது அமைப்ப ஊடாக முன்னெடுப்பதாகவும் தெரிவித்த அவர், துன்புறுத்தல்கள் அல்லது ஏதேனும் பாதிப்புக்கு உள்ளாகி  நாடு திரும்பியவர்களுக்கு மருத்துவ காப்புறுதிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இவ்வாறான பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் கடந்த 6 வருடங்களில் 100- 150 முறைப்பாடுகள் கிடைத்தன என்றார்.

இதேப்போல் அம்பாறையில் செயற்படும் மற்றுமொரு தனியார் அமைப்பு SOCIAL WELFARE ORGANATION AMPARA DISTRIC  (SWOAD) திட்ட அதிகாரி, கைலாயநாதபிள்ளை பிரேமலதன் தெரிவித்த கருத்து,

2013- 2020 புலம்பெயர் தொடர்பான வேலைத்திட்டமொன்று அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதற்கு சுவிஸ் தூதரகம் நிதியுதவி செய்ததாகவும் தெரிவித்தார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு ஆலோசனைகள், தகவல்களை வழங்குதல், பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு,முகவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், நாடு திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்குதல் என்பதோடுபணிகளுக்காக வெளிநாடு சென்று வந்தவர்கள், பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு தொழில் செய்வதற்கான வழிகாட்டல், வெவ்வேறு நிறுவனங்கள் ஊடாக நிதி உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை தமது அமைப்பு முன்னெடுத்ததாகத் தெரிவித்தார்.

 அம்பாறை மாவட்டத்தின் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்  இச் செயற்திட்டம் முடிவடைந்த பின்னர்  30 கிராமங்களில் புலம்பெயர் சமூக அமைப்பு  உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அது மாத்திரமின்றி ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் புலம்பெயர் தகவல் மையங்களை உருவாக்கி வெளிநாடு சென்றவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

30 சமூக அமைப்புகளும்  அந்தந்த கிராமங்களில் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், வெளிநாடு சென்று வந்தவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை அரசாங்கத்துக்கு அறியப்படுத்தல், சேமிப்பு செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.

கடந்த 8 வருடங்களில்  சம்பள பிரச்சினை, துன்புறுத்தல்களுக்கு உள்ளானவை, முகவர்களால் பாதிக்கப்பட்டமை தொடர்பில் 1200 முறைப்பாடுகள் கிடைத்ததுடன், இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் அறிவித்து நட்டஈடுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம் என்றார்.

இதேவேளை இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் பலர் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக செல்கின்றமையால் அவர்கள் ஏதேனும் பாதிப்புகளை எதிர்கொண்டாலும் அது தொடர்பான உரிய தகவல்களையோ அது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளையோ எடுக்க முடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அத்துடன் போலி ஆவணங்களை காண்பித்து செல்கின்றமை, அந்த நாட்டின் சட்டதிட்டங்கள் தொடர்பில் தெளிவின்மை, மொழிப்புலமை இன்மை போன்ற காரணங்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்கள் என்றார்.

இந்த நிலையில், உரியமுறையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து, சட்டரீதியாக புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்றவர்களை கௌரவிக்கவும், உரியமுறையில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் முகமாகவும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து பதுளையில் அண்மையில் நிகழ்வொன்றையும் ஏற்பாடு செய்திருந்தது.

எனவே மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பெண்கள், அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்கள், மொழிகள், தாம் செய்யும் பணிகள் குறித்தான முழுமையான தெளிவுடன் செல்வது அவசியம்.

அதேபோல் சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தால் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக மாத்திரம் செல்வது மிக மிக அவசியம் என்பதுடன் அதுவே தமக்கான பாதுகாப்பை ஏதோ ஒரு வகையில்  உறுதிப்படுத்தலாம் என்பது ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகின்றது.

(மஹேஸ்வரி விஜயனந்தன்) 

Mentoring and financial support by Internews


நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02


NEWS21
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...