அநுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு; இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை கைதுசெய்து விசாரணை செய்தனர்.

செப்டெம்பர் 18, 2024 - 13:31
செப்டெம்பர் 18, 2024 - 13:31
அநுரவை பதற்றமடைய வைத்த புறா மீட்பு; இளைஞர்களுக்கு எச்சரிக்கை!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்கவை புறா ஒன்றின் மூலம் பதற்றமடைய வைத்த இளைஞர்கள் இருவர், சம்மாந்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.

தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்டத்திற்கான சம்மாந்துறை தொகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.

இதன்போது அதிகளவான மக்கள் மத்தியில்  ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றிக் கொண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில், மேடையை அண்மித்த வானத்தில் சிவப்பு நிற மின்னொளி பாய்ச்சப்பட்டு, ஏதோவொரு மர்மப்பொருள் நகர்ந்து வந்துள்ளது.

இதனையடுத்து கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக உசாரடைந்ததுடன், தனது பாதுகாப்பு அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்பிற்காக மேடையில் இருந்து சிறிது நேரம் அகற்றப்பட்டார்.

கூட்டம் நடைபெற்று முடிவடைந்த பின்னர் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவுப் பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது கூட்டம் நடைபெற்ற பகுதியில் இருந்து LED LIGHT பொருத்திய 'புறா' பறந்து சென்றதை விசாரணை ஊடாக அறிந்ததுடன், அப்பகுதியில் புறா வளர்ப்பில் ஈடுபடும் 18 மற்றும் 19 வயது இரு இளைஞர்களை நேற்றுத் திங்கட்கிழமை (16) கைதுசெய்து விசாரணை செய்தனர்.

கைதானவர்கள், சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவு செய்வதற்காக இரவு வேளையில் புறாவின் காலில் LED lightயை பொருத்தி அதனை தினமும் பறக்க விடுவதாக தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கைதான இருவரையும் சம்மாந்துறை பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுதலை செய்ததுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் தந்தையார் ஓய்வு பெற்ற முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!