அமெரிக்காவில் வளர்ப்பு நாய் தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு – பெற்றோர் அலட்சியம் காரணமாக கைது
குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு கண்காணிப்பின்றி நாயுடன் ஒரே அறையில் இருந்திருக்கலாம் எனவும், அலட்சியம் இந்த துயரத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஏற்பட்ட துயரச்சம்பவத்தில், குடும்பம் வளர்த்த நாய்களில் ஒன்றின் தாக்குதலால் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
ஒக்லஹோமா நகர காவல்துறைக்கு உதவி கோரிய அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமி லொக்லின் மெக்வயர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடத்திய தொடக்க விசாரணையில், குழந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு கண்காணிப்பின்றி நாயுடன் ஒரே அறையில் இருந்திருக்கலாம் எனவும், அலட்சியம் இந்த துயரத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில், குழந்தையின் தாய் மற்றும் தந்தை மீது பொறுப்பின்மை மற்றும் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் அவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில வாரங்களில் தனது மூன்றாவது பிறந்தநாளை எட்டவிருந்த இந்தக் குழந்தையின் உடல் இறுதி சடங்குகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.