பியூமி ஹன்சமாலி அழகுசாதனப் பொருட்கள்: தரநிலை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
நடிகை பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான 'லோலியா ஸ்கின்' நிறுவன அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து அரச ஆய்வாளரிடம் அறிக்கை பெறுமாறு கொழும்பு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. குறுகிய காலத்தில் மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பிரபல நடிகையும் மொடலுமான பியூமி ஹன்சமாலிக்குச் சொந்தமான லோலியா ஸ்கின் நிறுவனத்தால் நாடு முழுவதும் அழகுசாதனப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த அழகுசாதனப் பொருட்களின் தரநிலைகள் குறித்து, அரச ஆய்வாளரிடமிருந்து அறிக்கையைப் பெறுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌசல்யா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (சிஐடி) நேற்று (15) உத்தரவிட்டுள்ளார்.
பியுமி ஹன்சமாலி, சந்தைப்படுத்தும் கிரீம்கள் தேவையான பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்கின்றனவா என்பதை தீர்மானிக்க அனுமதி கோரி, சிஐடியின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் சட்டவிரோத சொத்துகள் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் பிற செல்வாக்கு மிக்க நபர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, ஆடம்பரமான வாழ்க்கை முறையை வழிநடத்தி, குறுகிய காலத்திற்குள் பியூமி ஹன்சமாலி சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான சொத்துகளைச் சேர்த்ததாகக் கூறப்படும் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.