முன்னோர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்? தெரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் அந்த மாதிரியான காட்சிகளை கண்டால் முதலில் இது சகஜமான ஒன்று என்பதை நினையுங்கள். காரணம் அவர்கள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி வரலாம்.

கனவு என்பது அனைவருக்கும் பொதுவானது. கனவில் நம்மை சுற்றியுள்ள விஷயங்கள், நம் மனதில் உள்ள எண்ணங்கள், நம்முடைய உறவு கொண்டிருக்கும் சொந்தங்கள் என பலரும் பலவிதமான காட்சிகளில் தோன்றுவார்கள்.
சில நேரங்களில் கனவுகள் மிக பயங்கரமாகவும், பல நேரங்களில் மனதிற்கு இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் கனவுகள் அமையும். இப்படியான கனவில் நம் வீட்டில் மறைந்த முன்னோர்கள் சில நேரங்களில் தோன்றி சில விஷயங்களை நமக்கு உணர்த்துவார்கள்.
இதற்கு என்ன அர்த்தம் என தெரியாமல் பலரும் குழம்பி போவார்கள். அப்படியாக முன்னோர் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்பது பற்றி பார்க்கலாம்.
ஒருவேளை, நீங்கள் அந்த மாதிரியான காட்சிகளை கண்டால் முதலில் இது சகஜமான ஒன்று என்பதை நினையுங்கள். காரணம் அவர்கள் உங்கள் மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அடிக்கடி வரலாம்.
குறிப்பாக உறவு சார்ந்த விஷயங்கள், பிரச்சனைகள் ஆகியவற்றில் எச்சரிக்கை விடுக்கவும், நம்மை பாதுகாக்கவும் முன்னோர்கள் கனவு வழியாக தோன்றுகிறார்கள் என நம்பப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் கனவில் முன்னோர்கள் வந்தால் அதனை சாதாரணமாக விஷயமாக கடந்து போகக்கூடாது. ஏதேனும் தவறான வழியில் செல்லவோ, செயல்கள் செய்யவோ நினைத்தால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
இத்தகைய கனவில் முன்னோர்கள் உங்களை நோக்கி கைகளை நீட்டி பேசுவதாக காட்சிகள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கண்டு நீங்கள் சிரமப்படுவதை நினைத்து அவர்கள் வருத்தப்படுவதாகவும் உங்களுக்காக ஏதேனும் செய்ய விரும்புவதாகவும் அர்த்தமாக பார்க்கப்படுகிறது.
நீங்கள் இதை செய்ய வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்தால் உடனடியாக யாருக்கேனும் அன்னதானம் உள்ளிட்ட தானங்களை மேற்கொள்ளுங்கள். இப்படியான செயல்கள் அவர்களை திருப்திப்படுத்தும்.
முன்னோர்கள் உங்கள் படுக்கை அருகில் நிற்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நிலவும் பிரச்சனைகள் விரைவில் முடிவுக்கு வரும் என்பது அர்த்தம் ஆகும். அதேபோல் கால்கள் அருகில் இருப்பதைக் கண்டால் நீங்கள் அசாதாரணமான சூழலை சந்திக்க உள்ளீர்கள் என சொல்லப்படுகிறது.
மேலும் முன்னோர்களுடன் நீங்கள் வாழ்ந்த காலத்தில் உங்களுக்கு இருந்த அதே அன்பு தொடர்பான காட்சிகள் வந்தால் அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும் என்பதே அர்த்தம் ஆகும்.
சில நேரங்களில் முன்னோர்கள் நம்மிடையே கோபத்துடன் பேசுவது போன்ற காட்சிகள் இருக்கும். அப்படி என்றால் நிலம், சொத்து தொடர்பான தோஷங்கள் இருப்பதை அது குறிக்கும் என கூறப்படுகிறது.
(கனவு அறிவியல் மற்றும் சாஸ்திரங்களின்படி எழுதப்பட்டுள்ள இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்களுக்கு அறிவியல் விளக்கம் கிடையாது.)