நாளை முதல் மழையுடனான வானிலை படிப்படியாக குறையும் – வளிமண்டலவியல் திணைக்களம்
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் மழையுடனான வானிலை, ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து படிப்படியாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
அதேவேளை, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புகளைப் பொறுத்தவரை, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்,. காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 25-35 கி.மீ வேகத்தில் வீசும்,. கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வரையான கடற்பரப்புகளிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 45 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் இக்கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் உருவாகும் அபாயங்களை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறவும், அவசர இடர் நிலைமைகளை அறிவிக்கவும் இடர் மேலாண்மை நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

