முட்டை, கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
முட்டை விலையை சிலர் உயர்த்த முயற்சி நடப்பதை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

எதிர்காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலையை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இறக்குமதியை தொடரும் திட்டம் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக உள்ளூர் முட்டை மற்றும் கோழி உற்பத்தியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என அவர் கூறியுள்ளார்.
மேலும், உள்ளூர் உற்பத்தியை ஆதரித்து அதிகரிப்பதன் மூலம், நாட்டிற்குள் முட்டை மற்றும் கோழியின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் முட்டை விலையை சிலர் உயர்த்த முயற்சி நடப்பதை கண்டறிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், விலைகளை அதிகரிக்க அரசாங்கம் அனுமதிக்காது. கோழி இறைச்சியின் விலையிலும் இதையே கடைப்பிடிக்கிறோம். கோழி இறைச்சியின் விலையையும் அதிகரிக்க விடமாட்டோம்.
தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, நியாயமற்ற விலை உயர்வுகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.