உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அருணாசலம் லெட்சுமணன்
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது.

மலேஷியாவில் நடைபெறவுள்ள 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இலங்கையில் இருந்து பங்கேற்கும் அணியில் மலையகத்தை சார்ந்த அருணாசலம் லெட்சுமணனும் ஆய்வாளராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இம்மாநாட்டின் அமர்வு ஒன்றில், "இலங்கையில் அறுபதுகளுக்கு பின்னரான மலையக நாடக முன்னெடுப்புகள்" எனும் தலைப்பில் இவர் ஆய்வுரை நிகழ்த்தவுள்ளார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளின் வரலாற்றில் முதன் முறையாகவே மலையக கலை, இலக்கியம் தொடர்பிலான பதிவு இம்மாநாட்டில் இடம்பெறவுள்ளது.
நிகர் சமூக, கலை, இலக்கிய அரங்கத்தின் பிரதான அமைப்பாளராக சமூக, கலை, இலக்கிய எழுத்துத்துறைகளில் பணியாற்றும் இவர், கட்டபுலா, ம.மா-கொத்- உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின் அதிபருமாவார்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம், உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கொழுப்புத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் சர்வதேச தமிழியல் மாநாடுகளில் பங்கேற்று, மலையக கலை, இலக்கியங்களுள் குறித்த ஆய்வுரைகளையும் அருணாசலம் லெட்சுமணன் முன் வைத்துள்ளார்.
இவர், நாவலப்பிட்டி, கதிரேசன் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் என்பதோடு, ஸ்ரீபாத தேசியக் கல்வியியற் கல்லூரியில் ஆசிரியர் மாணவராக பயிற்சி பெற்றுள்ளார்.
தனது உயர் கல்வியை பேராதனை பல்கலைக்கழகம் (வெளிவாரி) தேசிய கல்வி நிறுவகம் ஆகியவற்றில் பயின்றதோடு, தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் வெளிவாரியாக பாடநெறியை மேற்கொண்டு வருகின்றார்.
அத்தோடு, நிகர் சமூக, கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தேசிய சர்வதேசிய கலை, இலக்கிய அமைப்புகளிலும் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.