இயற்கையுடனான நெருக்கத்தை நினைவூட்டும் தைப்பொங்கல்: வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
இந்தப் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயற்கையுடன் நெருக்கமாக வாழ வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இக்காலகட்டத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைந்த தைப்பொங்கல் பண்டிகை நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்ந்த அர்த்தத்தை வழங்குகிறது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் வாழும் இந்து பக்தர்கள் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். வெற்றிகரமான விளைச்சலுக்கு துணை நின்ற சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி செலுத்தும் விழாவாக தைப்பொங்கல் திகழ்கிறது.
செழிப்பையும் நன்றியுணர்வையும் அடையாளப்படுத்தும் இந்தப் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி கூறும் ஒரு நிகழ்வாக மட்டுமல்லாது, எதிர்காலத்தை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடு எதிர்கொண்ட மிகப் பாரிய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் இதுவரை இல்லாத அளவிலான பெரும் புனரமைப்பு பணிகளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். அந்த முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்ட அனைவரும் கைகோர்க்க வேண்டும் என இந்தச் சுபீட்சமான தைப்பொங்கல் நாளில் அவர் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எந்த இருளுக்கும் பின் ஒளி பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கையுடன், ஒற்றுமையும் உறுதியும் கொண்டு சவால்களை வென்று, “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற இலக்கை நோக்கி பயணிக்க இவ்வருட தைப்பொங்கல் சிறந்த ஆசீர்வாதமாக அமைய வேண்டும் என அவர் பிரார்த்தித்துள்ளார்.
இலங்கையிலும் உலகின் பல பகுதிகளிலும் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகளை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



