திணறிய இந்திய வீரர்கள்.. திடீரென வாட்டர் பாயாக மைதானத்திற்குள் வந்த கிங் கோலி!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக உள்ள விராட் கோலி, 25 ஆயிரம் ரன்களுக்கும் மேலாக குவித்து சாதனை படைத்தவர்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக உள்ள விராட் கோலி, 25 ஆயிரம் ரன்களுக்கும் மேலாக குவித்து சாதனை படைத்தவர்.
இந்த நிலையில் விராட் கோலி கடைசி முறையாக உலகக்கோப்பைத் தொடரில் விளையாட உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் சச்சினை போல் சிறந்த ஃபேர்வெல்லை இந்திய வீரர்கள் விராட் கோலிக்கு அளிக்க வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் உலகக்கோப்பை பயிற்சி தொடங்கியது.
இதனால் இளம் வீரர்களை உலகக்கோப்பைத் தொடருக்கு தயார்ப்படுத்தும் வகையில் முதல் போட்டியில் விராட் கோலி தனது பேட்டிங் வரிசையை மாற்றிக் கொண்டு கடைசி வரை களமிறங்கவில்லை.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் படேல் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைப்பதற்காக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விலகினர்.
இதன்பின் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, 90 ரன்கள் வரை சிறப்பாக ஆடியது. ஆனால் அதன்பின் சீட்டுக்கட்டை போல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
113 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதால் ஆட்டம் தொடங்கிய நிலையில், சூர்யகுமார் 24 ரன்களுக்கும்,. ஜடேஜா 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அப்போது களம் புகுந்த ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவுடன் இணைந்து அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
37வது ஓவரின் போது டிரிங்ஸ் பிரேக் வழங்கப்பட்ட நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு சாஹல் தண்ணீர் மற்றும் டவலை எடுத்து வந்தார். அவருடன் விராட் கோலியும் தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு வாட்டர் பாயாக மைதானத்திற்குள் நடந்து வந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர்.