டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ‘டை’ ஆன இரண்டாவது போட்டி! 

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பிடித்த அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. 1960இல் ஆஸ்திரேலியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டை ஆன போட்டியாக இருந்தது.

செப்டெம்பர் 22, 2023 - 11:13
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ‘டை’ ஆன இரண்டாவது போட்டி! 

டெஸ்ட் கிரிக்கெட்டில் போட்டி முடிவுகளை வெற்றி, தோல்விகளை கடந்து குறிப்பிட்ட நாளில் முடியாத பட்சத்தில் டிரா ஆனதாக அறிவிப்பதுண்டு. 
ஆனால் ஒரு நாள் போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இரு அணிகளும் ஒரே ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகி, போட்டி முடிவுகள் இன்றி டை ஆன நிகழ்வு இரண்டு முறை நிகழ்ந்துள்ளது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் இடம்பிடித்த அணி என்ற பெருமை ஆஸ்திரேலியாவுக்கு உள்ளது. 1960இல் ஆஸ்திரேலியா - வெஸ்ட்இண்டீஸ் அணிகளுக்கு இடையே பிரிஸ்பேனில் நடைபெற்ற போட்டி தான் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டை ஆன போட்டியாக இருந்தது.

இந்த சம்பவம் நடைபெற்று 26 ஆண்டுகள் கழித்து 1986இல் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சென்னையில் நடைபெற்ற போட்டி டை ஆனது. இதன் பின்னர் இன்று வரையிலும் எந்தவொரு டெஸ்ட் போட்டியும் டை ஆனது கிடையாது.

இந்தியாவுக்கு உலகக் கோப்பை பெற்று தந்த கபில் தேவ் கேப்டன்சியில், வெற்றியின் அருகே வரை சென்ற இந்தியா கடைசி நேரத்தில் அதை அடையாமல் ஏமாற்றத்தை அளித்தது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நடைபெற்ற இந்த போட்டியில் சில சுவாரஸ்ய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்தியா அணியின் முதல் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்பட்ட சுனில் கவாஸ்கர் தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனை புரிந்தார். 

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் 330 பந்துகளை எதிர்கொண்டு 210 ரன்கள் அடித்தார். அவர் அவுட்டான பிறகு கடுமையான வெப்பம் காரணமாக ஏற்பட்ட சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா கபில் தேவ் சதத்தால் 397 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 177 முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதனால் இந்தியாவுக்கு 348 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கவாஸ்கர் அதிகபட்சமாக 90 ரன்கள் அடித்தார். ஒரு கட்டத்தில் ஐந்தாவது நாளின் கடைசி ஓவர் 4 ரன்கள் தேவை, கைவசம் ஒரு விக்கெட் என இருந்தது. 

கிரேக் மேத்யூஸ் வீசிய அந்த ஓவரில் அப்போது களத்தில் ரவி சாஸ்த்ரி - மணிந்தர் சிங் ஆகியோர் இருந்தனர். சிறப்பாக பேட் செய்து வந்த சாஸ்த்ரி முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் அடிக்க ஸ்கோர் சமநிலை ஆனது.

ஆனால் எதிர்பாராத விதமாக ஓவரின் ஐந்தாவது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார் மணிந்தர் சிங். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது முறையாக போட்டி டை ஆனது. இந்த சம்பவம் நடந்து சரியாக இன்றுடன் 37 ஆண்டுகள் ஆகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!