ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். 

ஜுலை 9, 2025 - 15:29
ஜுலை 9, 2025 - 15:44
ஹட்டன் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவனை தேடும் பணி தீவிரம்

நுவரெலியா, ஜூலை 9 (நியூஸ்21)  - ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி காணமல் போயுள்ளார்.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு புகைப்படம் எடுக்க சென்றுள்ளனர். 

அவர்களில் ஒருவர் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது தமிழ் மாறன் என்ற மாணவனே, நேற்று (08) மாலை 5.00 மணியளவில் தனது நண்பர்களுடன் புகைப்படம் எடுத்த பிறகு, நீர்த்தேக்கத்தின் ஓரத்தில் உள்ள பாறையில் ஏறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

இந்த 6 மாணவர்களும் ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் என்றும், குறித்த மாணவர் அட்டை கடிக்குள்ளானதால்  காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறி இரத்தத்தை கழுவி கொண்டிருந்த வேலையில் அம் மாணவன்  நீர்தேக்கதில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

காணாமல் போன மாணவனை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஹட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை  நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் வழங்கல் பிரிவு தற்போது தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!