52 குட்டிகளுடன் மாட்டு தொழுவத்தில் பதுங்கியிருந்த ராஜநாகம்.. அதிர்ச்சியடைந்த நபர்
பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த விவசாயியான ராதாகிருஷ்ணன் வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. எனினும், ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டின் முன்பு 2 குட்டி பாம்புகள் ஊர்ந்து சென்றன. இதனை பார்த்த ராதாகிருஷ்ணன், அந்த பாம்புகள் செல்லும் இடத்தை நோக்கி பின்தொடர்ந்து சென்றார்.
அப்போது அவை அவரது மாட்டு தொழுவத்துக்குள் சென்று, மண்ணுக்குள் பதுங்கியது. இதையடுத்து தொழுவத்தில் அவர் சோதனை செய்தார்.
அங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட குட்டி பாம்புகள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோட்டயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் வனத்துறையினர், பாம்புகள் பிடிக்கும் குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது மாட்டு தொழுவத்தில் தோண்டி பார்த்தனர். அதில் சில பாம்புகள் மட்டுமே பிடிபட்டன.
அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது உள்ளே பெரிய ராஜநாகம் ஒன்று இருந்தது. மேலும் அங்கு இருந்த குட்டி பாம்புகள், ராஜநாகத்தின் குட்டிகள் என்பது தெரியவந்தது.
பெரிய ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பதுங்கியிருந்தன. அவற்றில் 47 குட்டிகள் உயிருடனும், 5 குட்டிகள் இறந்த நிலையிலும் இருந்தன. இதைத்தொடர்ந்து பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
மாட்டு தொழுவத்தில் ராஜநாகத்துடன், 52 குட்டிகள் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.