கணவனிடம் கப்பம் கேட்ட கர்ப்பிணி மனைவியும் காதலனும் கைது
இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பினை ஏற்படுத்திய விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணவனிடம் சுமார் 5 மில்லியன் ரூபாயை கப்பமாகக் கேட்ட கர்ப்பிணியான மனைவி மற்றும் அவளுடைய காதலனும் கலவானை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்த கிளினிக்குக்குச் செல்வதாகக் கூறிவிட்டு 9ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்ற கர்ப்பிணியான தனது மனைவி, வீட்டுக்குத் திரும்பவில்லை என அவளுடைய கணவன், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த நிலையில், மனைவியை விடுவிக்கவேண்டுமாயின் 5 மில்லியன் ரூபாய் பணத்தை கொடுக்கவேண்டுமென, இனந்தெரியாத அழைப்பொன்று, கணவனின் அலைபேசிக்கு வந்துள்ளது.
இதுதொடர்பில் பொலிஸாரிடம் கணவன் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 31 வயதான பெண்ணையும் அவளுடைய காதலன் என அறியப்பட்ட 21 வயதான இளைஞனையும் கைது செய்தனர்.
இணையத்தளத்தின் ஊடாக 5 மாதங்களுக்கு முன்னர் தொடர்பினை ஏற்படுத்திய விருவரும் பின்னர் காதலர்களாக மாறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையத்து, கர்ப்பிணியை சியம்பலாண்டுவ நகருக்கு வரவழைத்த காதலன். கலவனை வெத்தேகொட பகுதியிலுள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து கணவனிடமிருந்து கப்பம் பெறுவதற்கான அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் கைது செய்த பொலிஸார், இளைஞனை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் எதிர்வரும்18ஆம் திகதி வரை சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கர்ப்பிணியான அந்தப் பெண், அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.