அனர்த்த சேதம்: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன், மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் 

உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

டிசம்பர் 16, 2025 - 18:10
அனர்த்த சேதம்: வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 75 பில்லியன், மின்சார சபைக்கு 20 பில்லியன் ரூபாய் நட்டம் 

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் வீதிகள் மற்றும் பாலங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக தற்போது அண்ணளவாக மதிப்பிடப்பட்டதன் அடிப்படையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சுமார் 75 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை முழுமையாகச் சீரமைக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய ஏனைய புனரமைப்புப் பணிகளுடன் சேர்த்து, அதற்காக சுமார் 190 பில்லியன் ரூபாய் தேவைப்படும் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

நாட்டில் நிலவும் அனர்த்தத்தின் தன்மையை ஆய்வு செய்வதற்கும், அதனால் ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அண்மையில் (11) பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்காரின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே, இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன. 

இங்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள், இந்த அனர்த்த நிலைமையினால் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 316 வீதிகளும் 40 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினர். 

அவற்றில் ரயில் பாதைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச வீதிகளுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், பிரதேச வீதிகளை மீண்டும் சீரமைக்கும் போது அதற்கான நிதியைப் பெறுவதற்கு அமைச்சின் தலைமையில் ஒரு வேலைத்திட்டத்தைத் தயாரிப்பதன் முக்கியத்துவத்தையும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். 

அதற்கமைய, தற்போது உலக வங்கி மூலம் 2 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும், மேலும் பல நிறுவனங்களிடமிருந்து இந்த புனரமைப்புகளை மேற்கொள்ளத் தேவையான நிதியைப் பெற எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 

அத்துடன், இந்த அனர்த்த நிலைமையினால் இலங்கை மின்சார சபைக்குச் சுமார் 20 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். 

உலக வங்கியிடமிருந்து இதற்காக ஒரு கடன் தொகையைப் பெறுவது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!