2024 - புத்தாண்டு ராசிபலன்கள்: 2024 புத்தாண்டு எப்படி? புத்தாண்டு பொதுப்பலன்கள்!

2024 புத்தாண்டு ராசிபலன்கள்: 2024 ஆம் ஆண்டு 12 ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Dec 31, 2023 - 15:41
Dec 31, 2023 - 16:09

1. 2024 புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்

2024 புத்தாண்டு மேஷ ராசிபலன்கள்

செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட மேஷம் ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி சாதகமாக இருக்கிறார். 2024ம் ஆண்டு மே மாதத்தில் குரு பெயர்ச்சி நடக்கும் போது நீங்கள் பல வகையில் நல்ல புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

கிட்டதட்ட 8 மாதங்கள் குரு மூலம் நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப பிரச்னைகள் எல்லாம் நல்லவிதமான முடிவுக்கு வரும். 2024ஆம் ஆண்டு மேஷம் ராசியினருக்கு காதல், தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

காதல்

மேஷ ராசியினருக்கு 2024-ம் ஆண்டில் திருமண வாழ்க்கை கைகூடும். கணவன், மனைவி இடையேயான உறவு பலப்படும். திருமண உறவு மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம்.

தொழில்

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சனியின் ஆதரவு இருப்பதால் நீங்கள் புதிய தொழிலைத் தொடங்கலாம். எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி அடையும். குரு உங்கள் ராசியிலேயே இருப்பதால் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் புகழைக் கொண்டு வரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

செல்வம்

நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிலம், வீடு மனை, சொத்து போன்ற விஷயங்களுக்கான முயற்சிகள் சாதகமாக அமையும்.

ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்ன சின்ன நோய்கள் ஏற்பட்டு நீங்கும். பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தைரியம், தன்னம்பிக்கை கூடும். குறிப்பாக பெண்கள், இல்லத்தரசிகளுக்கு திருப்தியான ஆண்டாக அமையும்.

மொத்தத்தில் மேஷம் ராசியினருக்கு தொழில், பணவரவு, ஆரோக்கியம் போன்றவைகள் பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. 

2. 2024 புத்தாண்டு ரிஷப ராசிபலன்கள்

2024 புத்தாண்டு ரிஷப ராசிபலன்கள்

ரிஷப ராசிக்கு சனி இந்த ஆண்டில் கொஞ்சம் சாதகமாக இருக்கிறார். குறிப்பாக 10-ஆம் இடத்தில் அவர் மிகவும் சாதகமாக இருக்கிறார். ஆகையால், உங்களது வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். தைரியமாக நீங்கள் களம் இறங்கலாம்.

செல்வம் 

பதினொன்றாம் இடத்தில் ராகு பகவான் இருக்கிறார். அவர் சனியை விட இன்னும் நன்றாக உங்களுக்கு சில விஷயங்களை செய்யப் போகிறார். அதனால் உங்களுக்கு திடீரென்று அதிர்ஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

காதல் 

மே மாதத்திற்கு பிறகு குருவானவன் ஜென்ம குருவாக மாறுகிறான். அதனால் உங்களது இயல்பில் தொந்தரவு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 2ம் இடத்தில், எந்த கிரகங்களிலாலும் உங்களுக்கு தடையோ, தோஷமோ இல்லை. 

குருவானவன் ஜென்ம குருவாக மாறும் பட்சத்தில், அவனுடைய பார்வையானது ஏழாம் இடத்தில் சென்று பதியும். அது உங்களது பிசினஸ் உறவுகள், வாழ்க்கை உறவுகளில் நல்ல பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால், மே மாதத்திற்கு பிறகு வரன் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தலாம். 

கல்வி

ராகு 11ஆம் இடத்தில் இருப்பதால் நீங்கள் விடுதியில் தங்கி படிப்பவர் என்றாலோ, ஆன்லைனில் படிப்பவராக இருந்தாலோ உங்களுக்கு அது நல்ல விதமாக அமையும். 

ஆரோக்கியம் 

கேது ஐந்தாம் இடத்தில் இருப்பதால், சின்ன சின்ன உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் பெரிய அளவில் உடல் உபாதைகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. சில பேருக்கு சில உணவுகளால், ஒவ்வாமை, அலர்ஜி உள்ளிட்டவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதையும் நீங்கள் ஒரு சரியான மருத்துவரை அணுகி  சரிபடுத்துவீர்கள் என்றால், அதுவும் உங்களுக்கு சரியாகி போகும்.

3. 2024 புத்தாண்டு மிதுன ராசிபலன்கள்

2024 புத்தாண்டு  மிதுன ராசிபலன்கள்

2024ஆம் ஆண்டு என்பது தொடக்கத்தில் இருந்தே மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மையை கொடுக்கும் ஆண்டாக விளங்க போகிறது. 9ஆம் இடத்தில் உள்ள சனிபகாவனால் எந்த பிரச்னையும் ஏற்படாது. 10ஆம் இடத்தில் உள்ள ராகு வாய்ப்புகளை உங்களை தேடி துரத்த வைக்கப்போகிறார். 11ஆம் இடத்தில் உள்ள குருபகவானால் போதும், போதும் எனும் அளவுக்கு உங்களுக்கு செல்வம் சேரப்போகிறது.

இந்த ஆண்டில் உங்களில் நோக்கம் என்ன என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு முதல் நான்கு மாதங்களுக்குள் அதை தொடங்கி விடுங்கள். மே மாதத்தில் 12ஆம் இடத்திற்கு குரு செல்வதால் பின்னர் வாய்ப்பு வந்தாலும் அதை தொடர வாய்ப்பு இல்லாமல் போகலாம். எனவே எதையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதனை தொடங்குவது நல்லது.

குடும்ப வாழ்கையை பொறுத்தவரை அஷ்டம சனியால் சங்கடங்களை சந்தித்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டு விடிவுகாலமாக அமையும், குடும்பம் சார்ந்த வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வரும். வாழ்கையில் அடுத்த கட்ட அத்தியாத்தை நோக்கி செல்லும் பாதை கண்ணுக்கு புலப்படும்.

திருமண முயற்சிகள் கைக்கூடும். இடையில் ப்ரேக் அப் வரை சென்ற காதல் மீண்டும் மலரும். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இடம், வீடு, ஊர், வாகன மாற்றத்தை விரும்பும் மிதுன ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு சரியான ஆண்டாக அமையும்.

மாணவர்களுக்கு கல்வி முன்னேற்றம் கண்கூடாக தெரியும், 4ஆம் இடத்தில் கேது உள்ளதால் தலைவலி உள்ளிட்ட ஒரு வாரகால உடல் பிரச்னைகள் வந்து போக வாய்ப்பு உள்ளது. கடன் வாங்கியவர்கள் அதனை கட்டும் அமைப்பை ஏற்படுத்தும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு உள்ளது. புதிய கடன் வாங்கினாலும் அதனால் நன்மை ஏற்படும். மிதுனராசிக்கு நல்ல வாய்ப்புகளை தரக்கூடிய நல்ல ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.

4. 2024 புத்தாண்டு கடக ராசிபலன்கள்

2024 புத்தாண்டு   கடக ராசிபலன்கள்

2023 ம் ஆண்டில் பலருக்கும் மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்துள்ளது. சிலர் தங்கள் வாழ்வில் சில தடங்கல்களை கடந்திருக்கலாம். ஆனால் இனி வரும் புத்தாண்டில் நம் வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்று நம்பிக்கையோடு விடாமுயற்சியுடன் நாம் முன்செல்வோம். 

இந்நிலையில் 2024ம் ஆண்டில் கடக ராசியினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

2024ல் ஆரம்ப நாட்களில் கடகராசிகாரர்களை பொறுத்த மட்டில் குரு பத்தாம் இடத்தில் இருக்கிறார். இதனால் 2023ம் ஆண்டை போலவே 2024 லும் ஏப்ரல் வரை பெரிய வெற்றிகள் தொழிலில், வருமானத்தில் வந்து சேராது. பணியிடத்தில் மந்த நிலையிலேயே இருப்பீர்கள். 

இதனால் புத்தாண்டையொட்டி புதிய தொழில் தொடங்குதல் கூட்டு தொழில் தொடங்குவது என்பது போன்ற முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. இருக்கும் வேலையை விட்டு புதிய வேலைக்கு மாறுவதாற்காக அவசரப்பட்டு பிறகு சிக்கலில் மாட்டி கொள்ள வேண்டாம்.

ஆனால் 2024 மே மாதம் வியாழன் பெயர்ச்சி நடைபெற்ற பின் குரு 11ம் இடத்திற்கு செல்லும். இது லாப ஸ்தானத்தில் குரு வருவதை குறிக்கும். குரு பணத்தை கொடுக்கும் இடத்தில் இருக்கும்போது அதை தடுக்கும் ராகு கேது இல்லை. 8 ம் இடத்தில் சனி இருப்பார். ஆனால் சனி தடுக்கும் இடத்தில் இல்லாமல் தடையை குடுக்கும் இடத்தில் மட்டும் தான் இருப்பார். இதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் போராடி முயன்றால் வெற்றி சாத்தியம் ஆகும்.

2024ம் ஆண்டுக்கு மே மாதத்திற்கு பிறகு பண பலன்கள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையாக இருந்து புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆனால் மிக மிக கவனமாக இருப்பது நல்லது.

மே மாதத்திற்கு பிறகு கடக ராசிகாரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷேசங்கள் நிகழ்வுகள் கைகூட அதிக வாய்ப்புள்ளது. குருபகவான் அதற்கு துணை நிற்பார். ஆனால் சனி 2025 மார்ச் மாதம் வரை 8ம் இடத்தில் இருப்பதால் ஆரம்ப காலத்தில் தம்பதிகள் இடையே ஒத்து வராத சூழல், சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரக்கூடும். இதனால் தீவிர வாக்குவாதங்களை தவிர்க்கலாம். இந்த மனநிலைக்கும் தயாரான பின் திருமணத்தை நடத்துவது மிகவும் நல்லது.

கடகத்தில் பிறந்த குடும்ப பெண்கள் மனதில் இனம் புரியாத கவலை ஏக்கம், அதிருப்தி போன்றவை இருக்கும். இதனால் எதிர்பார்பை மிக மிக குறைத்து கொள்வது நல்லது. ஏதாவது ஒரு மந்திரத்தை தினந்தோறும் உச்சரித்து கடவுளை வணங்குவது நல்லது.

8ம் இடத்தில் சனி இருப்பதால் ஆரோக்கியம் மிக மிக முக்கியம். இதனால் இந்த காலகட்டத்தில் புதிய முயற்சிகள், உணவு, லாங் டிரைவிங், ட்ரக்கிங் என ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. காரணம் எத்தனை பணம் இருந்தாலும் உடல் நலத்துடன் இருந்தால் மட்டும் தான் அதை அனுபவிக்க முடியும் இதனால் முடிந்த வரை ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டு, நிம்மதியாக தூங்கி, எளிய உடற்பயிற்சிகளை செய்து கொள்வது நல்லது.

5. 2024 புத்தாண்டு சிம்ம ராசிபலன்கள்

2024 ஆம் ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகப் புத்தாண்டு சிறப்பாக இருக்கும். நீங்கள் எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக நீங்கள் பெறுவீர்கள். 2024 அண்டின் முதல் சில மாதங்கள் மிகவும் பிஸியாக இருக்கும். பணி நிமித்தமாகப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வரும் காலம் மிக முக்கியமானதாக இருக்கும்.

நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றலாம். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம். வேலை அழுத்தம் திடீரென அதிகரிக்கலாம்.

காதல் வாழ்க்கை ஆண்டின் முதல் சில மாதங்களுக்குச் சரியாக இருக்காது. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். அன்புக்குரியவர்களின் உடல்நிலையில் அக்கறை தேவை.

நீங்கள் ஒருவரையொருவர் மீண்டும் புரிந்துகொண்டு நடந்து கொண்டால் சிறப்பு. ஆண்டின் இறுதிக்குள் நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையை கை பிடிக்கலாம். காதலில் இருப்பவர்கள் ஜனவரி முதல் மார்ச் வரையில் திருமணம் செய்து கொள்ளலாம். உறவுகள் மோசமடையலாம். நீங்கள் ஒருவருக்கொருவர் அதிக நேரம் கொடுக்க வேண்டும். படிப்படியாக உறவு மேம்படும்

இந்த ஆண்டு நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வருமானம் நன்றாக இருக்கும். ஆனால் செலவுகளைக் குறைக்க வேண்டும். செலவு அதிகரித்தால் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும். ஆகஸ்ட் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

குடும்ப வாழ்க்கை சூழ்நிலை நன்றாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி நடக்கலாம். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். அவர்களின் ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்துங்கள்.

2024 ஆம் ஆண்டில் உங்களுக்கு சில உடல் பிரச்னைகள் வரலாம். உங்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். அலட்சியப்படுத்தினால் பெரும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும். உடல்நலம் திடீரென மோசமடையலாம். வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

6. 2024 புத்தாண்டு கன்னி ராசிபலன்கள்

2024 புத்தாண்டு  கன்னி ராசிபலன்கள்

2024 ஆம் ஆண்டு  கன்னி ராசியினர் தங்கள் வாழ்வில் பல தடைகளை சந்திருக்கலாம். பலருக்கு எதிர்பார்த்தது நடைபெறாமல் போயிருக்கலாம். நல்ல வேலை, தொழில், திருமண வாழ்க்கை என்று பலரும் பல கனவுகளோடு இருந்திருக்கலாம். 

ஆனால், எதிர்பார்த்தது கைகூடாமல் இருக்கலாம். ஆனாலும் உங்களது முயற்சி மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கும். பழையன கழிதலும் புதியது புகுதலுமாக வர இருக்கிறது 2024 புத்தாண்டில் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

குறிப்பாக, 2024ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு காதல் வாழ்க்கை, தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று  பார்க்கலாம்.

புதன் பகவானை ராசிநாதனாகக் கொண்ட கன்னி ராசியினருக்கு, 6ஆம் வீட்டில் சனி அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். திருமணம் தொடர்பாக உறுதியான முடிவுகள் எடுப்பதில் உங்களுக்கு சிக்கல் நிலவும். குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசி மீது விழுவதால் மே 2024க்கு பிறகு நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். 

அந்த நேரத்தில் திருமணம் குறித்து முடிவு எடுப்பது நல்ல பலனைக் கொடுக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. பிரச்னைகள் இல்லாமல் ஓரளவுக்கு அமைதியான வாழ்க்கை ஆரம்பமாகும்.

புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கடன் பிரச்னைகள் முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் பணம் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறது. அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு கை நிறைய சம்பளம், பதவி உயர்வுடன் கூடிய வேலை மாற்றம் கிடைக்கும். மிகப்பெரிய யோகத்தை தரக்கூடிய ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.

குரு, சனியால் பெரிய அளவில் நோய்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ராகு, கேதுவால் அவ்வப்போது சின்ன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும். எனவே உடல் நலத்தில் அக்கறை தேவை.

2024 மே மாதம் வரக்கூடிய குரு பெயர்ச்சி மாணவர்களுக்கு சாதகமாக அமையும். துறைகளை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படலாம். எனவே மாணவர்கள் தகந்த நிபுணர்களின் ஆலோசனை கேட்டு சரியான பாடத்தை தேர்வு செய்தால் வெற்றி நிச்சயம்.

மொத்தத்தில் கன்னி ராசியினருக்கு தொழில், பணவரவு சிறப்பாக அமையப்போகிறது. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. மற்றபடி பொற்கால ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது. கன்னி ராசியினரே மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

7. 2024 புத்தாண்டு துலாம் ராசிபலன்கள்

துலாம் ராசியினருக்கு 2023ம் ஆண்டு முடிவிலிருந்தே ராகு-கேது பெயர்ச்சி முதலே நேர்மறையான நிகழ்வுகள்தான் நடக்கும். எனவே 2024ம் ஆண்டிலும் அதுவே தொடரும். ராகு-கேது முற்றிலும், நீங்கி சனி பகவான் 5ல் அமர்கிறார். குரு எங்கு சென்றாலும் உங்களுக்கு கவலைதேவையில்லை.

அதுமட்டுமின்றி குரு கொடுக்கும் கிரகம்தான், கெடுக்கும் கிரகமல்ல. 7லிருந்து 8 செல்லும் குருவால் நன்மைகள்தான் துலாம் ராசியினருக்கு கிடைக்கும். எனவே 2024ம் ஆண்டு உங்களுக்கான ஆண்டு.

சுக்கிரன், துலாம் ராசியின் லக்னாதிபதி. முதல் 8 மாதங்கள் சாதகமாக இருக்கும். எனவே 2024ல் நினைத்த காரியங்கள் கைகூடும்.

தொழிலில் முன்னேற்றம் நன்றாக இருக்கும். நினைத்த விஷயத்தை, நினைத்த மாத்திரத்தில் முடிக்கும் அளவு கிரகங்கள் இந்தாண்டு நன்றாக இருக்கும்.

திருமணம் கைகூடும். திருப்திகரமான திருமணமாக இருக்கும். காதல் கைகூடும். வீட்டில் பார்த்து செய்யும் திருமணம் என்றால் அதுவும் நல்ல முறையில் நடைபெறும். குழந்தைபாக்கியம், நீண்ட கால நட்பு அல்லது உறவு திருமணத்தில் முடியும் வாய்ப்பு கூட உண்டு. குழந்தைகளுக்கு திருமணம் என்றாலும் அது கைகூடிவரும்.

தொழில், சொத்து, நகை, முதலீடு என அனைத்தும் நன்றாக நடக்கும். குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மாணவர்களின் படிப்பில் முன்னேற்றமடையும். 2024ல் எடுக்கக்கூடிய முடிவு உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். உங்களின் திட்டங்களை நீங்கள் இந்த ஆண்டில் வகுக்கலாம்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. கோயில் யாத்திரைகள் எல்லாம் அமையும். பயணங்கள் சந்தோஷங்களையும், பரிசுப்பொருட்களையும் கொண்டு வரும். அதிர்ஷ்டங்கள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.

துலாம் ராசிக்காரர்கள் என்னால் இது முடியும் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்களோ? அது கட்டாயம் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் பெரிய குறைபாடுகள் எதுவும் வராது. அவ்வப்போது சிறு சிறு உபாதைகள் மட்டும் வந்து போகும்.

மேலும், எந்த லக்னத்தில், எந்த திசையில் இருக்கிறீர்கள் என்பதையும் தெரிந்தகொண்டு அதற்கு ஏற்றற்போல் நடந்துகொண்டீர்கள் என்றால், உங்களுக்கு அது உங்களுக்கு நன்மையளிக்கும்.

8. 2024 புத்தாண்டு விருச்சிக ராசிபலன்கள்

2024 புத்தாண்டு   விருச்சிக ராசிபலன்கள்

2024ம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு  4 என்பது உங்கள் பதவி, அதிகாரம், வசதி, ஆரோக்கியம், வாகனங்கள் ஆகியவற்றையும், 5 என்பது உங்கள் மனது. மனதில் எப்போதும் குழப்பம் இருக்கக் கூடாது, கவலை இருக்கக் கூடாது, பயம் இருக்கக் கூடாது.

பயம், கவலை, வருத்தம், ஏக்கம் இதெல்லாம் மனதில் இருக்கக் கூடாது. நமது மனது தேவையில்லாததை சிந்திக்கிறது இல்லையா அது அந்த ராகுவின் வேலை தான்.

மனதை கெடுக்காமல் வைத்துக்கொள்ள தியானம் செய்தல், நல்ல நூல்களை வாசித்தல், இறை நம்பிக்கையுடன் இருத்தல் போன்றவற்றை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

விருச்சிகம் என்பது போராட்ட ராசிதான். போராடிதான் ஆக வேண்டும். ஆனாலும், 2024 மே மாதம் முதல் குரு பார்வை அந்த ராசி மீது விழுகிறது. இதனால் உங்களுக்கு சாதகம் அதிகம். விருச்சிகத்தை பொறுத்தவரை பொருளாதாரம், வேலை ஆகியவை 2024 ஏப்ரல் மாதம் முதல் சாதகமாக மாறிவரும் சூழல் இருக்கிறது. பொருளாதார சமநிலையில் இருக்கும். வாகனங்களில் பழுது வரும்.

குருவின் பார்வை விருச்சிகத்தின் மீது விழ தொடங்கிய உடன், பதவி உயர்வு, தொழிலில் வெற்றி, சம்பள உயர்வு, பெயர், புகழ், அவப்பெயர் நீங்குதல், மனக் குழப்பல் விலகுதல் ஆகியவை இருக்கும். அதுவரை சராசரியாக இருக்கும்.

காதல் கைகூட, திருமணம் நடைபெற குருவின் பார்வை இருந்தால் நடக்கும். இதுவும் மே 2024க்கு பிறகு தான் சரியாக இருக்கும். இல்லத்தரசிகளுக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். சுமை அதிகரிக்கும் என எண்ணம் தோன்றும். 

ஆனால், நீங்கள் இதை கண்டு கலங்காமல் இருங்கள். உங்களை நாடிவரும் உறவினர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள். முதியோர்கள் எளிமையான முயற்சிகளை செய்து இந்த ஆண்டை கடக்கலாம்.

மாணவர்கள் ஒரு பள்ளியிலிருந்து அல்லது கல்லூரியிலிருந்து மற்றொரு பள்ளி அல்லது கல்லூரிக்கு மாற வேண்டும் என நினைக்க வேண்டாம். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் போகலாம். ஆனால், 4இல் சனி இருப்பதால் உங்களுக்கு உரிய வசதிகள் அங்கு இருக்காது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உடல் உபாதைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். உதாரணத்திற்கு எலும்பு வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, முதுகு வலி என ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கும். மனதிலும் பெரிய பிரச்சனையாக இருக்குமோ என எண்ணத் தோன்றும். ஆனால், நிஜத்தில் அப்படி எதுவும் இருக்காது.

இங்கேயும் குருதான் உங்களுக்கு உதவும். மே மாதம் வந்த பிறகு குரு பார்வை விருச்சிகத்தின் மீது பட்ட பிறகு தான், ஆரோக்கியம், திருமணம், காதல் கைகூடுதல், செல்வம், பதவி உயர்வு போன்றவை வரக்கூடும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 2023-ஐ காட்டிலும் 2024 ஓரளவு உங்களுக்கு பரவாயில்லை என்று தான் கூற வேண்டும்.

9. 2024 புத்தாண்டு தனுசு ராசிபலன்கள்

2024 புத்தாண்டு தனுசு ராசிபலன்கள்


2024ல் மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு குரு பெயர்ச்சி அடைவதை தவிர வேறு எந்த பெயர்ச்சியும் இல்லை. தனுசுக்கு 2023ல் நிறைய நன்மைகள், நல்ல செயல்கள் நடந்திருக்கிறது. 

2024ல் சனி பாதுகாப்பாக இருக்கிறார். அவரால் எந்த தொல்லையும் இல்லை. 10ல் கேது இருப்பதால், பிரச்னை வருமா? என்கிற பயம் பலரிடம் இருக்கு. 4ல் இருக்கும் ராகு, பெரிய தொல்லை தரப்போவதில்லை. குரு பெயர்ச்சியால் பலன் குறையலாம், ஆனால் அவர் உங்கள் ராசிநாதன், எங்கிருந்தாலும், அவர் பாதுகாப்பார். 

2023ல் நல்ல தொழில், வியாபாரத்தை கண்டவர்கள், வாழ்க்கையில் தொழிலால் எந்த சிக்கலை சந்திக்காதவர்கள், ஏதாவது மாற்றத்தை செய்யலாம் என்று முயற்சிக்க நினைத்தால், அதற்கு 2024 தகுந்ததாக இருக்காது. 2023 தான் உங்களுக்கான ஆண்டு. அது முடிந்துவிட்டது. இருப்பதை வைத்து இன்புறுவது நல்லது. வேலை அமையாதவர்கள், ஜாதகத்தை வைத்து தசா புத்தியை பரிசோதித்து பார்ப்பது நல்லது. 

திருமணத்தில் தடை இருக்கிறதா என்று பார்த்தால், எங்கும் தடை இல்லை. ஏப்ரல் மாதத்திற்குள் திருமண ஏற்பாடுகளை முடிப்பது நல்லது. அதற்கு மேல் ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்தால் எளிதில் முடியாது; பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தான் நடக்கும். உறவில் இருப்பவர்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வந்து போகும்.

உடல் நலனில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு பெரிய அளவு தொந்தரவு இருக்கும் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் குரு 6ல் பெயர்ச்சி ஆகும் போது, தொல்லைகள் வரலாம். உறுதியாக இருப்பதாக நினைப்பவர்கள் கூட, சின்ன சின்ன பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். அவற்றை பொருட்படுத்தாமல் போக கூடாது. அது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி விடும். 

பெண்கள், இல்லத்தரசிகளுக்கு பெரிய வருத்தமோ, நெருக்கடியோ இருக்காது. தேவைகள் பூர்த்தியாக வாய்ப்புள்ளது. மூத்த குடிமக்கள் சொத்து வாங்குவதில், வாகனம் வாங்குவதில், புதிய முயற்சிகள் எடுப்பதில் துணிந்து இறங்கலாம். 

2023ல் உங்களுக்கு கிடைத்ததை தக்க வைத்துக் கொள்ள, 2024 ம் ஆண்டை பயன்படுத்திக் கொள்வது நல்லது. விஸ்தரிக்கிறேன் என்று முயற்சிகள் எடுத்து கையை சுட்டுக் கொள்ள வேண்டாம். 

10. 2024 புத்தாண்டு மகர ராசிபலன்கள்

2024 புத்தாண்டு மகர ராசிபலன்கள்

வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கே காணலாம். உங்களுடைய ராசிக்கு சுக்கிரன் மற்றும் புதன் இருவரும் சிறந்த ஆரம்பத்தை கொடுப்பார்கள். நிதி ரீதியாக உங்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகப் போகின்றது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து இங்கே காணலாம்.

இந்த ஆண்டு கிரகங்களின் மாற்றத்தால் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமைய உள்ளது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சேமிப்பு மற்றும் செல்வத்தில் எந்த குறையும் இல்லாமல் வளர்ச்சி அடையும். 

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் உங்களுக்கு ஏற்படாது. இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிதி ஒதுக்கும் வேலையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும் என்றால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும் ஏற்படாது.

உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை உங்களுக்கு கலவையான பலன்கள் தான் கிடைக்க உள்ளது ஆரம்பத்தில் உங்களுக்கு உடல்நிலை சிறப்பாக இருந்தாலும் கிரகங்களின் மாற்றத்தால் உங்களுக்கு அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இருப்பினும் செவ்வாய் பகவானின் பயணம் இருக்கின்ற காரணத்தினால் புத்துணர்வு மற்றும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் குரு பகவானின் இடமாற்றம் இருக்கின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். ஆரோக்கியம் இல்லாத துரித உணவு மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. உடற்பயிற்சி செய்து உங்கள் உடலை காத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் ராசியை பொறுத்தவரை பிப்ரவரி மாதத்தில் இருந்து நிதியை பெருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் செவ்வாய் பகவானின் பயணம் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

வேலை செய்யும் இடத்தில் ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கும் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் குருபகவான் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் மிகப்பெரிய வாய்ப்புகள் அமைய அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் ராசியை பொறுத்தவரை கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்வது வருகின்ற காரணத்தினால் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் நான்காம் வீட்டில் வருகின்ற காரணத்தினால் மகிழ்ச்சியில் எந்த குறையும் இருக்காது.

நீங்கள் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது இல்லையென்றால் அதற்கான திட்டமாவது தொடங்கி விடும். குருபகவான் இடமாற்றம் நடந்த பிறகு உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காதல் வாழ்க்கையை பொறுத்த அளவில் நீங்கள் திருமண உறவில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது புதிதாக உங்கள் வாழ்க்கை துணையை கண்டுபிடிக்கும் காலமும் அமைய வாய்ப்பு உள்ளது உறவினர்களால் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், காதல் வாழ்க்கையில் எந்த சிக்கல்களும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

11. 2024 புத்தாண்டு கும்ப ராசிபலன்கள்

2024 புத்தாண்டு கும்ப ராசிபலன்கள்

கும்ப ராசியில் பிறந்தவர்களே, வரும் 2024 ஆம் ஆண்டு உங்களுக்கு வெவ்வேறு அம்சங்கள் கொண்ட பலன்கள் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் ராசியில் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். 

உங்கள் கவனம் முழுவதும் ஆளுமைத் திறன் மற்றும் ஆரோக்கியத்தின் மீது இருக்கும் அதற்கே நீங்கள் முன்னுரிமை கொடுத்து வருவீர்கள். 12 ஆம் வீட்டில் அமர்ந்திருக்க கூடிய சனி பகவான் உங்களை இதனை சுலபமாக செய்ய விட மாட்டார். கடுமையான உழைப்பு இந்த பயணத்தில் உங்களுக்கு தேவை.

உங்கள் ராசியில் அதிபதியாக விளங்கக்கூடிய சனி பகவான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். அதன் காரணமாக உடல் ஆரோக்கியத்தில் எந்த சிக்கல்களும் ஏற்படாது. உங்களை நீங்கள் ஒழுக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பது கவனம் தவறாமல் இருக்க வேண்டும். அவ்வப்போது உடல் நல ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும். சிரமப்பட்டு நீங்கள் அதனை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் கூடுமானவரை இறைச்சி மற்றும் மதுவை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதில் நீங்கள் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது.

2024 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உங்களுக்கு கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். சனிபகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் சில வேலைகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். 
தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிரிகளை வெல்லக்கூடிய பலம் கிடைக்கும். உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் சனி பகவான் பார்வை விழுகின்ற காரணத்தினால் பொது விஷயங்களில் உங்களுடைய நாட்டம் அதிகரிக்கும்.

உங்கள் ராசியில் 11 மற்றும் இரண்டாவது வீடுகள் குரு பகவானால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உங்களுக்கு பண ஆதாயங்களோடு வருமானம் அதிகரிக்கும் அதே சமயம் சேமிப்பும் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் அதிகரித்து அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மே மாதத்திற்கு பிறகு குரு பகவானின் இடமாற்றத்தால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பெரும் தொகையை முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த இழப்பு உங்களுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த ஆண்டு பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. எப்பொழுதும் எப்படி செல்லுமோ அதேபோலத்தான் உங்களுடைய காதல் வாழ்க்கை இருக்கும். உங்கள் ராசியின் ஐந்தாம் வீட்டின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருவதால் உங்கள் காதல் வாழ்க்கையில் எந்த சிறப்பும் இருக்காது. உங்களுடைய காதல் வாழ்க்கையில் உணர்ச்சியை சீண்டுகின்ற ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும் எனவே கவனமாக இருங்கள்.

உங்களுடைய அன்பிற்கினியவர்கள் வாக்குவாதங்கள், புரிதல், உணர்வு பரிமாறுதல் உள்ளிட்ட செயல்களில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. செப்டம்பர் மாதம் முதல் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் சிறப்பான சில பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்கள் ராசியில் ஐந்தாம் வீட்டில் எந்த கிரகமும் செயல்பட முடியாது என்ற காரணத்தினால் எந்த பலன்களும் இருக்காது. புதன் பகவான் சீக்கிரம் நகருகின்ற கிரகம் என்கின்ற காரணத்தினால் கல்வியில் உங்களுக்கு அடுத்தடுத்து மாற்றங்கள் உண்டாகும். ஏப்ரல், ஆகஸ்ட் நவம்பர் இந்த மாத காலங்களில் புதன் பகவானின் பின்னோக்கிய பயணம் இருக்கும். அதனால் கல்வியில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

12. 2024 புத்தாண்டு மீன ராசிபலன்கள்

2024ல் சனி வக்கிரம் மட்டுமே அடைகிறார், பெயர்ச்சி இல்லை. குரு, 2024ன் நடுப்பகுதியில் பெயர்ச்சியடைகிறார். அவர், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு மாறுகிறார். 

ராகு, கேதுவுக்கு எந்த பெயர்ச்சியும் இல்லை. மாதக் கோள்கள் வழக்கம் போல நகர்ந்து கொண்டு தான் இருக்கும். மற்றபடி பெரிய பெயர்ச்சிகள் இல்லை. இது மீன ராசிக்கு எந்த மாதிரி பலன்களை தரும்?

மீனத்திற்கு ஏழரை சனி போய்க் கொண்டிருக்கும் நேர்த்தில், 2024 எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. சனி, 12ல் விரைய ஸ்தானத்தில் தான் இருக்கிறார். ராகு முதல் ஸ்தானத்தில் இருக்கிறார். குரு 2ல் இருப்பது ஒரு ஆறுதலாக உள்ளது. மே 2024ல் குரு பெயர்ச்சி நடந்த பின் என்ன ஆகும்? 

இருக்கும் இடம் நல்லா இருக்கும். ஏதோ ஒரு வகையில் வருமானம் வருகிறது என்று ஆறுதல் பட்டுக் கொண்டிருந்தால், அப்படியே 2024யை கடந்துவிடுங்கள். 

எனக்கு மாற்றம் வேண்டும், முன்னேற்றம் வேண்டும், பதவி உயர்வு வேண்டும், சம்பாதித்து குவிக்க வேண்டும் என ஏதாவது ஒரு முயற்சியை செய்தால், தேவையில்லாத சங்கடம் கட்டாயம் வரும். இருப்பது நன்றாக இருந்தால், அப்படியே விட்டுவிடுங்கள். கிரக நகர்வுகள் சாதகமாக இல்லை. 

உறவுகள், திருமணத்தை பார்த்தால், பெண் தேடுபவர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இருக்கிறது. ஏழரையில் தான் பெரும்பாலும் திருமண பலன்கள் கிடைக்கும். 

ஆனால், 2024ல் 12ல் சனி, ஜென்மத்தில் ராகு, 3ல் குரு, மே மாதம் அதுவும் பெயர்ந்து விடும். ஒருவேளை திருமணம் முடித்து தான் ஆக வேண்டும் என்று எல்லாம் கூடியிருந்தால், ஏப்ரல் மாதத்திற்குள் அதை முடித்துவிடுங்கள். 

அதுவும் சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஜாதகத்தை ஒன்றுக்கு பலமுறை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். மீனம் ராசிக்கு துலாம் ராசி ஒத்துப் போவாது. இந்த நேரத்தில் ஜாதகம் நல்லா இருக்கு என்று துலாம் ராசி ஜாதகத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். 

ரிஷபமும் தவிர்க்க வேண்டிய ஜாதகம். திருமணத்தில் அவசர முடிவு வேண்டாம். உறவில் இருப்பவர்களுக்கு கடும் மனஸ்தாபங்கள், பிரச்னைகள் வரும். தெளிவு வரும் வரை காத்திருங்கள். 

ஏழரை சனியில் படிப்பு வராது, மதிப்பெண் வராது, எதிர்பார்ப்பு அமையாது. இதெல்லாம் வழக்கமானது தான். உங்களை ஓரிடத்திற்கு காலம் தள்ளிவிடும். அது உங்களுக்கு பிடித்ததாக இருக்காது, ஆனால், வேறு வழியின்றி நீங்கள் அதை பிடித்துக் கொள்ள வேண்டும். 

இது உங்களுக்கான ஆண்டு இல்லை. ஆனால், எதையும் எதிர்கொள்ளும் நபராக மாற்றிக் கொண்டால் தப்பிக்கலாம். பாதையை மாற்ற முடியாது, எந்த பாதையிலும் நடக்க கற்றுக் கொள்ளுங்கள். 

வாகனங்களில் அதிக கவனம் தேவைப்படுகிறது. 20 வயதினருக்கு அதீத எச்சரிக்கை தேவை. புதிய வாகனங்கள் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள். ஒருவேளை வாகனம் இருந்தால், வேகத்தை தவிர்க்க வேண்டியது கட்டாயம். ஏதாவத ஒரு பிரச்னை என்றால், அது வாழ்க்கை முழுவதும் தொடரலாம், எச்சரிக்கை தேவை. விபத்து அபாயம் அதிகம் இருக்கிறது. 

இல்லத்தரசிகளுக்கு குடும்பத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சூழல் ஏற்படும். எல்லா நெருக்கடிகளிலும் உங்களை காப்பாற்ற ஏதாவது ஒரு மேஜிக் இறுதியில் நடக்கும். இறுதியில் கிடைக்கும் தெளிவை தெய்வத்தின் ஆசியோடு எதிர்கொள்ளுங்கள். 

பூஜை, விரதம், வழிபாட்டில் இருப்பது உங்களுக்கு நல்லது. முதியவர்கள், அமைதியாக இருப்பது நல்லது. அமைதியாக இருந்தால், பாதகமாக இருக்காது.