கடன் தொல்லை - தந்தை, மனைவி, மகனை கொன்று ஐ.டி. ஊழியர் தற்கொலை!
சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவராமன் (85). பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

சேலம் கோரிமேட்டை அடுத்த எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சிவராமன் (85). பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டதால் வசந்தா (75) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது மகன் திலக் (38). 'சாப்ட்வேர்' என்ஜினீயரிங் படித்துள்ள இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனா காலக்கட்டத்தில் வெளிநாட்டில் இருந்து சேலம் திரும்பிய அவர் தனது பெற்றோர் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வந்தார்.
திலக்கிற்கு மகேஸ்வரி (33) என்ற மனைவியும், சாய் கிறிஷ்சாந்த் (6) என்ற மகனும் இருந்தனர். இதற்கிடையில் சாய் கிறிஷ்சாந்த் வாய் பேசமுடியாமல் இருந்து வந்ததால் பெற்றோர் அவனை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.
இருப்பினும் குணமாகவில்லை என தெரிகிறது. மேலும் சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. ஒரே மகன் என்பதால் திலக், மகேஸ்வரி ஆகியோர் அதிக பாசத்துடன் வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு வாட்ஸ்-அப் மூலம் திலக் அனுப்பிய தகவலில், குழந்தையை குணப்படுத்த முடியாததாலும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்துரு அளித்த தகவலின்பேரில், கன்னங்குறிச்சி போலீசார் அங்கு வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிஷ்சாந்த் மற்றும் திலக் ஆகியோர் இறந்துகிடந்தனர்.
வசந்தா மயங்கிய நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட போலீஸார், சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மற்ற நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் தந்தை, மனைவி, மகனை கொன்றுவிட்டு என்ஜினீயர் திலக் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் வீட்டில் இருந்த கடித்தை கைப்பற்றினர். அதில், 'நான் பலரிடம் கடன் வாங்கி உள்ளேன். அதில் பாதி பணத்தை திருப்பி செலுத்திவிட்டேன். மீதி கடனை என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை.
இதனால் நாங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்கிறோம். மேலும் கடன் வாங்கி மகனுக்கு சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் இந்த முடிவை எடுக்கிறோம்' என்று எழுதப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, "குழந்தை வாய் பேச முடியாமல் இருந்ததால், மருத்துவச் செலவுக்காக திலக் அதிக கடன் வாங்கியுள்ளனர். மேலும், கடன் வாங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு, அதில் நஷ்டமடைந்துள்ளார்.
கடன் நெருக்கடியால் மன உளைச்சலுக்கு உள்ளான திலக், தந்தை சிவராமன், தாய் வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய்கிரிஷ்சாந்த்துக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும்.
ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர உதவி மையத்தை அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)