புதுவருட வார இறுதியில் பதிவான நான்கு கொலைகள்
இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 48 மணித்தியாலங்களில் நான்கு கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை கலேவல பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை சமரசம் செய்ய முயன்ற 23 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான இளைஞன் கலேவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஹக்மன பிரதேசத்தில் இன்று அதிகாலை 21 வயதுடைய இளைஞன் ஒருவன் பழைய தகராறு காரணமாக மாமாவினால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
கம்புருபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில், சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், எலயபத்துவ பிரதேசத்தில் நேற்று மாலை 37 வயதுடைய நபர் ஒருவர் கத்தி மற்றும் கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மது அருந்திக்கொண்டிருந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே குறித்த நபர் தாக்கப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த மரணம் தொடர்பாக 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், நேற்றிரவு சேருநுவர பிரதேசத்தில் 41 வயதுடைய நபரொருவர் திருமணத்திற்கு புறம்பான உறவு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் காதல் வயப்பட்ட பெண்ணின் கணவனால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் சேருநுவர பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். (News21)