பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது,

அநுராதபுரம் ரம்பேவ பிரதேசத்தில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
விஐபி விளக்குகள் பொருத்தப்பட்ட எம்பியின் வாகனம் போக்குவரத்து அதிகாரிகளால் நிறுத்தப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதுடன், அது தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதயும் படிங்க: போக்குவரத்து பொலிஸாருடன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதம்
சம்பவத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த சில கருத்துக்கள் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவை சமூகங்களுக்கிடையில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"நாங்கள் விஐபிகள் இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ள அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நிகரான சலுகைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.