ஆசிய கோப்பை 2023 - இந்தியா vs நேபாளம் மோதல்.. கண்டி வானிலை... இன்றாவது போட்டி நடக்குமா?

ஆசிய கோப்பை 2023: பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

செப்டெம்பர் 4, 2023 - 12:53
ஆசிய கோப்பை 2023 -  இந்தியா vs நேபாளம் மோதல்.. கண்டி வானிலை... இன்றாவது போட்டி நடக்குமா?

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ முன் வராத காரணத்தால், வேறு வழியின்றி ஆசியக் கோப்பை தொடர் ஹைபிரிட் மாடலில் நடத்தப்பட்டு வருகிறது. 

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இலங்கையில் மழை பெய்யும் என்று கூறியும், பாகிஸ்தானின் பேச்சை ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இலங்கையில் நடத்துவதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகளவு வெப்பம் இருக்கும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திமிராக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. 

பாகிஸ்தான் பேச்சை கேட்காததன் விளைவு, இலங்கையின் பல்லேகல மைதானத்தில் நடத்தப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் நேபாள அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தப் போட்டியும் கண்டி பல்லேகல மைதானத்தில் தான் நடத்தப்படவுள்ளது. பல்லேகல மைதானத்தை பொறுத்தவரை முதல் சில ஓவர்கள் பவுலர்களுக்கு சாதகமாகவும், மிடில் ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கானதாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே வெற்றிபெறும் என்று தரவுகள் சொல்லுகின்றன. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வு செய்யவே வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கண்டியில் நேற்றும் கனமழை பெய்தது. இன்றைய நாளிலும் 70 சதவிகித மழைக்கு வாய்ப்பு இருப்பதால், இந்தியா - நேபாளம் போட்டி நடப்பது சந்தேகம் என்றே சொல்லப்படுகிறது. 

ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?

அதேபோல் பல்லேகல மைதானத்தில் 15 முதல் 25 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போல் இந்தியா - நேபாளம் போட்டியும் கைவிடப்படுவதற்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்ட போதே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் பிசிசிஐ மீது அதிக விமர்சனங்கள் எழுந்தன. 

தற்போது மீண்டும் ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டால், இந்திய அணி ரசிகர்கள் கொந்தளிப்பது நிச்சயம். அதுமட்டுமல்லாமல் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறாமல் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!