ஆசிய கோப்பை 2023 - கொழும்பில் கொட்டும் கனமழை.. ஆசியக் கோப்பை போட்டிகள் மாற்றம்?
ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
முதல் பேட்டிங் முடிவடைந்த போது தொடங்கிய மழை, இரவு 10 மணியாகியும் நின்றபாடில்லை.
மழை நிற்பதற்காக காத்திருந்த நடுவர்கள் இறுதியாக 9.50 மணிக்கு இரு அணி கேப்டன்களுடன் ஆலோசனை நடத்தி ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மிக முக்கிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதற்கு பிசிசிஐ மற்றும ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தான் காரணம் என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் ஆசியக் கோப்பையை என்று ஆலோசனை கூறிய போதும், ஏசிசி நிர்வாகிகள் ஏற்கவில்லை என்று குற்றச்சாட்டப்பட்டது.
ஆசிய கோப்பை 2023 - ரோகித், கோலியை வீழ்த்த திட்டமுள்ளது.. நேபாள கேப்டன் பேட்டி!
இலங்கையில் ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் அதிக மழை இருக்கும். இதனையறிந்தே ஆசியக் கோப்பை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொழும்பில் நேற்றும் கனமழை பெய்தது. அதுமட்டுமல்லாமல் கண்டியில் இன்று மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தரப்பில் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளை இடமாற்றம் செய்யலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கும் கனமழை பெய்வது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலை கவலையடைய செய்துள்ளது.
செப்டெம்பர் 9 முதல் கொழும்புவில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. ஒருவேளை சூப்பர் 4 சுற்றுப் போட்டிகளும் மழையால் கைவிடப்படும் நிலை வந்தால், விமர்சனங்களும் அதிகமாகும்.
இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆசியக் கோப்பை போட்டிகளை இடமாற்றம் செய்வது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.