ஆசிய கோப்பை 2023 - ரோகித், கோலியை வீழ்த்த திட்டமுள்ளது.. நேபாள கேப்டன் பேட்டி!
ஆசிய கோப்பை 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த எங்களிடம் திட்டமிருப்பதாக நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பை 2023 : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் வீழ்த்த எங்களிடம் திட்டமிருப்பதாக நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - நேபாளம் அணிகள் இன்று விளையாடவுள்ளன. நேற்று முன்தினம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிட்டது.
ஆனால் இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற நேபாள அணியை வீழ்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நேபாள அணியை எதிர்த்து இந்திய அணி முதல்முறையாக களமிறங்க உள்ளது.
இதுவே இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய அணியை எதிர்த்து விளையாட உள்ளது குறித்து நேபாள அணி கேப்டன் ரோகித் பவுடல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை 2023 - சமநிலையில் நிறைவடைந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி
அதில், இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ள போட்டிக்காக ஆர்வமாக இருக்கிறோம். இதுபோன்ற அணிகளுடன் விளையாடும் வாய்ப்புகள் எங்களுக்கு எளிதாக கிடைப்பதில்லை.
ஆசியக் கோப்பை போன்ற பெரிய தொடரில் எங்கள் நாட்டின் பிரதிநிதியாக இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது பெருமை அளிக்கிறது. பாலக்கலே வானிலையை பொறுத்தவரை எங்களின் கைகளிலில்லை. மழை வந்தால் அதற்கேற்ப நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்.
இந்திய அணிக்கு எதிராக எங்களின் திறமையை வெளிப்படுத்துவது தான் ஒரே குறிக்கோள். அப்படி வெளிப்படுத்தவில்லை என்றால், சிறிய அணிகளுடன் தான் தொடர்ந்து விளையாட முடியும்.
பாகிஸ்தான், இந்தியா போன்ற அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கனவிலும் நினைத்ததில்லை. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைக்கு எங்களாலும் செல்ல முடியும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் நட்சத்திரமாக இருந்து வருகிறார்கள்.
இந்தப் போட்டியில் அவர்கள் இருவரையும் வீழ்த்துவதற்கான திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனை சரியாக செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். ஏசிசி பிரீமியர் லீக் தொடரை வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.