பிரித்தானியாவில் சீன தூதரகத் திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு – மூன்றாவது முறையாக தாமதம்
சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
லண்டனில் சீனா உத்தேசித்துள்ள புதிய தூதரக கட்டுமானத் திட்டம் மீண்டும் தாமதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசு, இத்திட்டம் தொடர்பான இறுதி முடிவை டிசம்பர் 10, 2024-க்குள் அறிவிக்க வேண்டும் என இருந்த நிலையில், அதை ஜனவரி 20, 2026 வரை ஒத்திவைத்துள்ளது. இது இந்தத் திட்டத்திற்கான மூன்றாவது முறை ஒத்திவைப்பு ஆகும்.
சீனா, லண்டனின் டவர் ஆஃப் லண்டன் அருகே 200 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தை இடித்து, ஐரோப்பாவின் மிகப்பெரிய தூதரகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது.
உள்ளூர் குடியிருப்பாளர்கள், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஹொங்கொங் ஜனநாயக ஆதரவாளர்கள் ஆகியோர் இந்தத் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய தூதரகம் உளவு நடவடிக்கைகளுக்கு மையமாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
பிரித்தானிய மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தத் திட்டத்தை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். உள்ளூர் மக்கள், தங்களது பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் பாரம்பரிய கட்டிடக்கலை ஆகியவற்றின் மீதான கவலைகளை முன்வைத்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய அரசு, “திட்டம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் கூர்ந்து பரிசீலித்து, ஜனவரி 20, 2026-க்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்” என அறிவித்துள்ளது. இந்நிலையில், சீன தூதரகத் திட்டம் மீண்டும் உறுதியற்ற நிலையில் உள்ளது. இது பிரித்தானியா–சீனா இருதரப்பு உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.