இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்து நிகழ்வில் 57 பேர் கைது!
இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட விருந்து நிகழ்வில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம, உஸ்வெட்டகொய்யாவ பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சட்டவிரோத போதைப்பொருட்களைப் பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் களியாட்ட விருந்து நடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு பொலிஸாரால் சோதனை நடத்தப்பட்டது.
நேற்றிரவு (23) நடைபெற்ற இந்த விருந்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் ஐஸ் மற்றும் கஞ்சாவை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா வைத்திருந்ததற்காக 16 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மேலும், அங்கு இருந்த 07 பெண் சந்தேகநபர்களையும் 34 ஆண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், இந்த விருந்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் 3 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்பதுடன், அவர்கள் 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.