பிக்பாஸ் சீசன் 6: கடும் விமர்சனங்களை கடந்து அசீம் வெற்றி!

போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.

Jan 23, 2023 - 15:00
பிக்பாஸ் சீசன் 6: கடும் விமர்சனங்களை கடந்து அசீம் வெற்றி!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டுள்ளார். சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவினுக்கு சமூக ஊடகங்களில் அதிகமாக ஆதரவு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அசீமின் வெற்றி பெரும்பாலான பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனால் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி குறித்த கருத்துப் பகிர்வுகள் தற்போது சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டபோது பொதுமக்கள் மத்தியில் பெருமளவு ஆதரவு எழுந்தது. அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வந்த சீசன்களும் வெகுஜன பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்து வந்தது. திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், மாடல்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தவர்கள் எனப் பல்வேறு வகையிலான போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிகாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொதுவாக 100 நாட்கள் வரை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஆடல் பாடல் நிகழ்வுகள், போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்படும் போட்டிகள், எவிக்‌ஷன் முறைகள், அவர்களுக்கிடையே நிகழும் சண்டைகள் என்று பார்வையாளர்களுக்குப் பலவித பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருக்கும்.

தாங்கள் திரையில் காணும் பிரபலங்களின் தனிப்பட்ட குணாதிசயங்களை அறிவதற்கும் அவர்களின் கதைகளைக் கேட்பதற்கும் மக்களுக்கு இருக்கும் ஆர்வமே ஒவ்வொரு சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட சில போட்டியாளர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவதும், அதேபோல் மற்ற சில போட்டியாளர்கள் எதிர்மறையான தங்களின் செயல்பாடுகளின் மூலம் அந்த சீசன் முழுவதும் பேசுபொருள் ஆவதும் வழக்கம்.

தற்போது பிக்பாஸ் சீசன் 6இல் வெற்றி பெற்றுள்ள போட்டியாளர் அசீம் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். இவருடைய வெற்றி தற்போது சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு உள்ளாகியிருப்பதற்கும் அதுவே காரணம்.

நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே தன்னுடைய செயல்பாடுகளின் மூலம் சக போட்டியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் முகச்சுளிப்பை ஏற்படுத்தி வந்தவர் அசீம். தன்னுடைய செயல்பாடுகளுக்காக நிகழ்ச்சி தொகுப்பாளரான கமலிடமும் பல அறிவுரைகளையும் கண்டிப்புகளையும் அவ்வப்போது பெற்று வந்தார்.

அதேபோல் இறுதிச்சுற்று வரை வந்த சக போட்டியாளர்களான விக்ரமன், ஷிவின் ஆகியோர் மக்களிடையே தொடர்ந்து ஆதரவையும் நன்மதிப்பையும் பெற்று வந்தனர். ஆனால் தற்போது இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் அறிவிக்கப்பட்டிருப்பது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் பெரும் திருப்புனையாக அமைந்துள்ளது என சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று முதல் பிக்பாஸ் சீசன் 6 குறித்த கருத்துகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளன. விஜய் டிவியை புறக்கணிப்போம் என்ற (Boycottvijaytv) ஹேஷ்டேக் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக போட்டியாளர் விக்ரமனை ஆதரித்துப் பலரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். `அறம் வெல்லும்` எனக் கூறி மிகவும் நேர்மையான விளையாட்டையும் கண்ணியமான நடவடிக்கைகளையும் கடைபிடித்து முற்போக்கான கருத்துகளைத் தெரிவித்து வந்த விக்ரமனை தோற்கடித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல், போட்டியில் மட்டுமே அசீம் வெற்றிபெற முடிந்துள்ளது ஆனால் மக்களின் மனதை விக்ரமன்தான் வென்றுள்ளார் என்பது போன்ற கருத்துகள் சமூக ஊடகங்கள் முழுவதும் பேசப்பட்டு வருகின்றன.

அதேபோல் அசீமை வெற்றிபெறச் செய்து தமிழ் சமூகத்தை மிகவும் பிற்போக்கான நிலைக்கு அழைத்துச் செல்ல விஜய் டிவி முயன்றுள்ளது எனவும் ஒரு மனிதன் எப்படி வளரக்கூடாது என்பதற்குச் சான்றாக அசீமை சொல்லலாம் எனவும் மக்கள் ட்வீட் செய்கின்றனர்.

அதில் ‘abuserazeem, clownazeem’ போன்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பெற்றுள்ளன. அசீமை வெற்றியாளராக அறிவித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசன்கூட பெரிதாக எந்தவொரு மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

பிற சமூக ஊடக தளங்களில் எங்களுடன் இணைந்திருங்கள்