குழு மோதலில் இளம் குடும்பஸ்தர் கொலை; மூவர் காயம்
விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.

தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலையில் நேற்று (13) அனுமதிக்கப்பட்டு, தற்போது நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய பகை காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் தலவாக்கலை நகரில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது எனவும், அதன்பின்னர் உயிரிழந்தவரும், அவரது நண்பர்களும் ஓட்டோவில் வீடு நோக்கிப் பயணித்துள்ளனர் எனவும், இவர்களை மற்றுமொரு ஓட்டோவில் துரத்தி வந்த குழுவினர், ஹொலிரூட் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் வைத்து வழி மறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு தரப்பினரும் மோதிக்கொண்டுள்ளனர். விக்கெட் கம்புகள், கூரிய ஆயுதங்களைக்கொண்டே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
மோதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேகநபர்களை லிந்துலை பிரதேசத்தில் வைத்து லிந்துலை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன், இருவரும் தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பயணித்த ஓட்டோக்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிவஞானம் சஞீவன் (வயது 22) என்ற இளம் குடும்பஸ்தரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
(க.கிஷாந்தன்)