இலங்கையின் உதவி இருந்தால் இந்தியாவால் பைனலுக்கு செல்ல முடியும்!

ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. 

ஜனவரி 1, 2025 - 00:49
இலங்கையின் உதவி இருந்தால் இந்தியாவால் பைனலுக்கு செல்ல முடியும்!

2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2021 பைனல் மற்றும் 2023 பைனல் என இரண்டு இறுதி சுற்றிலும் இந்திய அணி தகுதி பெற்று தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் ஹாட்ரிக் முறையாக இந்தியா பைனல் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி சில டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோல்வியை தழுவி இருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே பைனலுக்கு செல்லும் என்ற சூழலில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இடத்தை உறுதி செய்து இறுதி சுற்றுக்கு சென்று விட்டது. 

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இன்னும் மூன்று டெஸ்ட் போட்டிகள் எஞ்சி இருக்கிறது. 

இதில் இந்தியாவிற்கு எதிராக சிட்னி டெஸ்ட் போட்டியும் பின் இலங்கைக்கு சென்று அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒன்றில் வெற்றி பெற்றால் கூட இறுதிச்சுற்றுக்கு செல்ல முடியும்.

இதனால் ஆஸ்திரேலியா இரண்டாவது இடம் பிடிக்கவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. இந்தியா தற்போது 52.78 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

இந்தியா இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு சாதகமான முடிவுகள் அமைய வேண்டும். புத்தாண்டில் தொடங்கும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் இந்தியா பைனலுக்கு செல்லும் வாய்ப்பு சுத்தமாக இருக்காது. 

அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது வெல்ல வேண்டும்.

இல்லையெனில் இரண்டு போட்டியும் சமனில் முடிய வேண்டும். இது நடந்தால் மட்டுமே இந்திய அணி பைனலுக்கு செல்லும். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் நியூசிலாந்து அணி இருந்தாலும் அவர்கள் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டார்கள். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி இருக்கிறது.

இலங்கை அணி 45.45 வெற்றி சதவீதத்துடன் உள்ளது. இலங்கை அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்தியா ஆஸ்திரேலியா மோதும் சிட்னி டெஸ்ட் போட்டி சமனில் முடிய வேண்டும். அது மட்டும் இல்லாமல் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் போது அவர்கள் இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற வேண்டும். இது நடந்தால் அவர்கள் பைனலுக்கு செல்ல முடியும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!