ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பசில் வெளியிட்ட தகவல்: விமான நிலையத்தில் ரகசிய கலந்துரையாடல்!
பசில் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவும் சிறிது நேரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை 8.16 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.
அவர் Emirates Airline EK 650 விமானத்தில் நாட்டை வந்தடைந்தாக கூறப்படுகிறது.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோர் விமானத்திற்குச் சென்று பசில் ராஜபக்ஷவை வரவேற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பின்னர், இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் மாத்திரம் விமான நிலையத்தில் உள்ள விசேட விருந்தினர் அறைக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, பசில் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவும் சிறிது நேரம் சிநேகபூர்வமாக கலந்துரையாடியுள்ளனர். அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, கோகில ஹர்ஷனி குணவர்தன, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, சஹான் பிரதீப் விதான, ஜயந்த கட்டகொட, இந்திக்க அனுருத்த, அருந்திக பெர்னாண்டோ, திஸ்ஸகுட்டியராச்சி உள்ளிட்ட 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசிலை வரவேற்க வந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பசில் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
"மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் செய்கிறேன். எப்பொழுதும் டிசெம்பரில் செல்வேன். வருடத்தில் சில நாட்களே பிள்ளைகளுடன் செலவிடுகிறேன். அந்த நாட்களைக் கழித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
எதிர்காலத்துக்காக கடினமாக உழைக்கிறேன். உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். எனினும் அதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் எம்.பி.க்கள் தீர்மானித்தால் பொதுத்தேர்தலை நடாத்தலாம்.
எந்த தேர்தல் வந்தாலும் நான் அதற்கான ஏற்பாடுகளை செய்வேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலமாக உள்ளது. நாம் மக்களை ஒருபோதும் ஏமாற்றவில்லை. சில இடங்களில் தவறு செய்துள்ளோம். மக்கள் சொன்னதை நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் சொன்னதை மக்கள் ஏற்கவில்லை." என்றார்.