மழை மேலும் நீடிக்கும்; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றும் காலை முதல் 50 தொடக்கும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில், இன்று (13) முதல் அடுத்து வரும் சில நாட்களுக்கு 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இன்றும் காலை முதல் 50 தொடக்கும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கண்டியில் பலத்த மழை
அதேவேளை, கண்டி - பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்க அணையின் 04 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழையினால் கண்டி புகையிரத நிலையம் மற்றும் போகம்பர பஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் வான்பாய ஆரம்பித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகக் காற்று அதிகரித்து வீசக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களில் அவதானம் தேவை
மேலும், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
கடல் கொந்தளிக்கும்
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதால், அவ்வேளைகளில் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை மற்றும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
எனவே, இது தொடர்பில் கடற்படை மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளது.