இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

அமளியில் ஈடுபட்டதாக 97 மக்களவை எம்.பி.க்களும், 46 மாநிலங்களவை எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

டிசம்பர் 22, 2023 - 12:24
இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் எண்ணிக்கை 146 ஆக உயர்வு

இந்திய நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாள்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

அமளியில் ஈடுபட்டதாக 97 மக்களவை எம்.பி.க்களும், 46 மாநிலங்களவை எம்.பி.க்களும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியவுடன் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதே சமயத்தில், எம்.பி.க்கள் இடைநீக்கத்தை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட தொடங்கினர். 

அவர்கள் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் கையில் பிடித்திருந்தனர். அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.

கேள்வி நேரம் முடிந்தவுடன், தீபக் பைஜ், டி.கே.சுரேஷ், நகுல்நாத் ஆகிய 3 காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயர்களை குறிப்பிட்டு, சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை விடுத்தார். 

அப்போது அவர், "நான் காரணமின்றி எந்த எம்.பி.யையும் இடைநீக்கம் செய்தது இல்லை. நீங்கள் காகிதங்களை கிழித்து வீசுகிறீர்கள். என்னிடம் வந்து, இடைநீக்கம் செய்யுமாறு கேட்கிறீர்கள். சபைக்கு பதாகைகளை கொண்டு வருகிறீர்கள். இது சரியல்ல" என்று கூறினார்.

பின்னர், தீபக் பைஜ், டி.கே.சுரேஷ், நகுல்நாத் ஆகிய 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததால் இடைநீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தீர்மானம் கொண்டு வந்தார். 

அத்தீர்மானம் நிறைவேறியதால், 3 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இரு அவைகளிலும் மொத்தம் 146 எம்.பி.க்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!