கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபார சதத்தால் நியூசிலாந்துக்கு 398 டார்கெட்!

அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலியும் வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

நவம்பர் 15, 2023 - 22:47
கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் அபார சதத்தால் நியூசிலாந்துக்கு 398 டார்கெட்!
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசிய கேப்டன் ரோஹித் சர்மா தலா 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து ஷுப்மனுடன் இணைந்த விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் அதிரடி காட்டத் தொடங்கிய ஷுப்மன் கில் அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய போது 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 79 ரன்கள் எடுத்து காயம் காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பி மருத்துவ உதவிபெற்றார். 

அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலியும் வழக்கம் போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். 

இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50ஆவது சதத்தைப் பதிவுசெய்து விராட் கோலி புதிய உலகசாதனையை நிகழ்த்தினார். இதன்மூலம் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனையைப் படைத்து அசத்தினார். 

இதையடுத்து 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 117 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது உலகக்கோப்பை கிரிக்கெட் சதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் 4 பவுண்டரி, 8 சிக்சர்களை விளாசிய ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.

ஆனாலும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேஎல் ராகுல் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும், ஷுப்மன் இல் 80 ரன்களையும் எடுத்தனர். 

இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்களைக் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ 3 விக்கெட்டுகளையும், லோக்கி ஃபர்குசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!