பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 18, 2023 - 13:43
பாக்கு நீரிணையை நீந்தி கடக்கவுள்ள புனித மைக்கேல் கல்லூரி மாணவர்கள்!

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசியப் பாடசாலையின் சிரேஷ்ட சாரண மாணவர்கள்  மூவர், இம்மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபடவுள்ளனர்.

கடலில் பிளாஸ்ரிக் பொருட்கள் கலப்பதனை தடுக்கும் நோக்கிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நீச்சல் முயற்சியானது பாக்கு நீரிணையைக் கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ள ஆசியச் சாதனையையும் முறியடிக்கும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ளது. 

அத்துடன், புனித மிக்கேல் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்று வருகின்ற நிகழ்வுகளின் ஓர் அங்கமாகவும் இது அமையவுள்ளது.

இவர்களுடைய நீச்சல் நிகழ்வானது, 22ஆம் திகதி அதிகாலை 01 மணிக்கு தனுஷ்கோடியில் ஆரம்பிக்கப்பட்டு, தலைமன்னார் வரை நடைபெறவுள்ளது.

திங்கட்கிழமை (16) இரவு  பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில், நீச்சலில் ஈடுபடவுள்ள மாணவர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோரிடம் தேசியக் கொடி, பாடசாலைக்கொடி, சாரணர் கொடி உள்ளிட்ட கொடிகள் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப், மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன் மற்றும் மாவட்ட உதவி சாரண ஆணையாளர் இன்னாசி கிறிஸ்ரி ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது நடைபெற்ற ஊடக சந்திப்பில் புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப், மாவட்ட சாரண ஆணையாளர் விவேகானந்த பிரதீபன், நீச்சலில் ஈடுபடவுள்ள மாணவர்களில் ஒருவரான டியான் பிரிடோ ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

கருத்து வெளியிட்ட பாடசாலையின் அதிபர் அன்ரன் பெனடிக் யோசப்,

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் இணைந்து பாக்கு நீரிணை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை நிலைநாட்டவுள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு எதிர்வரும் 22.10.2023 திகதி புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட சாரண மாணவர்கள் மூவர் இணைந்து இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு  நீரிணையை குறுகிய நேரத்திற்குள் கடந்து தலைமன்னாரை வந்தடைந்து மீண்டுமொருமுறை சாதனையினை நிலைநாட்டவுள்ளனர். 

பாக்கு நீரிணையை கடக்க இருக்கும் மட்டக்களப்பு  புனித மைக்கேல் கல்லூரியின் 03 மாணவர்களுள், இருவர் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து பாக்கு நீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்தடையவுள்ள சிரேஷ்ட சாரணர்களான புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ மற்றும் இருதயநாதன் கெல்வின் கிசோ ஆகியோர் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த சாதனையை நிலைநாட்டவுள்ளனர் என்று தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் பாடசாலை அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப், மாவட்ட சாரணர் ஆணையாளர் விவேகானந்தா பிரதீபன், சாரண ஆசிரியர் இன்னாசி கிறிஸ்டி மற்றும் சாரண மாணவர்கள் உள்ளிட்ட பெற்றோரும் கலந்துகொண்டிருந்ததுடன், அதிபர் மற்றும் சாரண ஆணையாளரினால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், கொடிச்சீலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை, மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான தவேந்திரன் மதுஷிகன்  பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து ஏற்கெனவே சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!