ஆசிய கோப்பை 2023 - தொடர்ந்து வெற்றி.. பங்களாதேஷ் அணியை விரட்டிவிரட்டி அடித்த இலங்கை.. சரண்டரான ஷகிப்!
ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிய கோப்பை 2023: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளது.
ஆசிய கோப்பைத் தொடரின் இரண்டாவது போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியை எதிர்த்து பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
இந்த நிலையில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஆனால் பதிரான மற்றும் தீக்சனவின் அபார பந்துவீச்சால் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பந்துவீசிய பதிரான 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய 165 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய இலங்கை அணியின் கருணரத்ன - நிஷாங்க இணை களாமிறங்கியது. டஸ்கின் அஹ்மத் வீசிய 3வது ஓவரில் கருணரத்ன 1 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான நிஷாங்க 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இலங்கை அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து ஷகிப் அல் ஹசன் பந்தில் குசல் மெண்டிஸ் 5 ரன்களில் வீழ்ந்தார்.
இலங்கை அணி 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தததால், ஆட்டம் லோ- ஸ்கோரிங் த்ரில்லராக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உள்ளே களம் புகுந்த சமரவிக்ரம - அசலங்க இணை, அந்த சீசனெல்லாம் இங்கே கிடையாது என்று ஆட்டத்தை சிறப்பாக கொண்டு சென்றனர்.
சிறப்பாக ஆடிய சமரவிக்ரமா 69 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து 54 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தனஞ்செய டி சில்வா 2 ரன்களில் வீழ்ந்தார்.
இதனால் 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்து தடுமாறியது. ஆனால் இன்னொரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் சிறப்பாக ஆடிய அசலங்க, யாரின் பந்துவீச்சிலும் அவசரப்படவில்லை.
அரைசதம் கடந்த அவர், அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சரை விளாசினார். இறுதியாக 39 ஓவர்களில் இலங்கை அணி இலக்கை எட்டியது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இலங்கை அணி வென்றுள்ளது.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்க 92 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடர்ச்சியாக 11 ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.
இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் 10 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. தற்போது முதல்முறையாக 11 ஒருநாள் போட்டிகளில் வென்று அசத்தியுள்ளது.