ஆசிய கோப்பை 2023 - சிஎஸ்கே சிங்கத்தின் கர்ஜனை.. பதிரன வேகத்தில் சுருண்ட பங்களாதேஷ்... இலங்கைக்கு எளிய இலக்கு!
ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் 2வது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 165 ரன்களை பங்களாதேஷ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை 2023: ஆசியக் கோப்பை தொடரின் 2வது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற 165 ரன்களை பங்களாதேஷ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆசியக் கோப்பைத் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் - இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இல்லாததால் சீனியர் வீரர்கள் மீதான அழுத்தம் அதிகரித்திருந்தது. அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், பெரிய ஸ்கோர் அடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இலங்கை அணி வானிலையை கணித்து 2வது ஓவரிலேயே ஸ்பின்னரை கொண்டு வந்தது. தீக்சன வீசிய 2வது ஓவரிலேயே அறிமுக வீரர் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் முகமது நைம் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து ஷாண்டோ - ஷகிப் அல் ஹசன் கூட்டணி இணைந்தது. ஷகிப் அல் ஹசனின் வருகைக்காக காத்திருந்த இலங்கை அணி, உடனடியாக பதிரானாவை அட்டாக்கில் கொண்டு வந்தது.
அவரும் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு லெந்தில் பிட்ச் செய்து ஷகிப் அல் ஹசனை ஒரு வழி செய்தார். அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஷகிப் அல் ஹசன் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பின்னர் வந்த ஹிருடாய் - ஷாண்டோ இணை சிறிது நேரம் போராடியது.
4வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில், கேப்டன் ஷனகா பந்தில் ஹிருடாய் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த அனுபவ வீரர் ரஹீம் பதிரானா பந்தில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இன்னொரு முனையில் நின்று போராடிய ஷாண்டோ அரைசதம் அடித்தார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் யாரும் ஷாண்டோவுக்கு பெயரளவில் கூட கம்பெனி கொடுக்கவில்லை. மெஹதி ஹசன் மிராஸ் 5 ரன்களிலும், மெஹதி ஹசன் 6 ரன்களிலும் டஸ்கின் அஹ்மது டக் அவுட்டிலும் ஆட்டமிழந்தனர்.
161 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் விளையாடிய நிலையில், பதிரானாவின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆல் அவுட்டாகியது.
இறுதியாக பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக வங்கதேசம் அணியின் ஷாண்டோ 89 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் பதிரானா 4 விக்கெட்டுகளையும், தீக்சனா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.