பாகிஸ்தானுக்கு எதிராக முதல் உலகக் கோப்பை வெற்றியை பெறுமா இலங்கை?
தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக 7 தோல்விகளை பெற்றிருக்கும் இலங்கை, எட்டாவது தோல்வியை தடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்ச்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக 7 தோல்விகளை பெற்றிருக்கும் இலங்கை, எட்டாவது தோல்வியை தடுத்து வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 8வது போட்டி பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையே ஹைதராபாத்தில் வைத்து இன்று நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நெதர்லாந்து பவுலிங்கை சமாளிக்க முடியாமல் பெரிய ஸ்கோரை பாகில்தான் அணி அடிக்க தவறினாலும் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
பாகிஸ்தான் அணியில் பேட்டிங்கை காட்டிலும் பவுலிங்கில் இருந்த சிக்கல் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சரியானது. எனவே தற்போது பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பக்கவாக பாகிஸ்தான் அணி செட்டாகியுள்ளது.
இலங்கை அணி, தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் மோசமான பவுலிங்கால் 400 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது. இதனால் பேட்டிங்கில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக தோல்வியை தழுவியது.
தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் அனுபவ வீரர் தீக்ஷனாவுக்கு பதிலாக இளம் வீரர் வெல்லலகே பிரதான ஸ்பின்னராக சேர்க்கப்பட்டார். ஆனால் அதற்கான பலன் கிடைக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் தீக்ஷனா களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கலாம்.
அந்த வகையில் பேட்டிங்கை காட்டிலும், ஸ்பின் பவுலிங்கை ஆயுதமாக வைத்து பாகிஸ்தான் பேட்டிங்குக்கு அச்சுறுத்தல் தர இலங்கை அணி முயற்சிக்கலாம்.
உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் கடைசி ஓவரில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது இலங்கை. எனவே அங்கு பெற்ற தோல்விக்கு தற்போது பாகிஸ்தான் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கலாம். அத்துடன் அணி காம்பினேஷனில் பெரிய மாற்றங்கள் இருக்காது எனவும் தெரிகிறது.
முதல் இரண்டு போட்டியை போல் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக ஆடுகளம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்பு இல்லை.
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை மோதியுள்ளன. இதில் 7 முறையும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஒரு முறைகூட இலங்கை அணி, பாகிஸ்தானை வென்றதில்லை. எனவே இந்த முறை பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி கணக்கை தொடங்குவதற்கான திட்டத்துடன் இலங்கை அணி களமிறங்கும்.