சிரேஷ்ட அரச ஊழியர் லயனல் பெர்னாண்டோ காலமானார்
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும் இராஜதந்திரியுமான லயனல் பெர்னாண்டோ ஜூலை 6 ஆம் திகதி கொழும்பில் காலமானார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியும் இராஜதந்திரியுமான லயனல் பெர்னாண்டோ ஜூலை 6 ஆம் திகதி கொழும்பில் காலமானார்.
லயனல் பெர்னாண்டோ நெதர்லாந்து, பிரான்ஸ், போர்த்துக்கள், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இலங்கைக்கான தூதுவராகவும் மலேசியாவில் உயர்ஸ்தானிகராகவும் பணியாற்றினார்.
அவர் வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநராக பணியாற்றியதுடன், வெளிவிவகார அமைச்சு, வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் பல அமைச்சுக்களின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
சிலோன் சிப்பிங் கார்ப்பரேஷன், அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைவராகவும், தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபகத் தலைவராகவும் பணியாற்றினார்.
மேலும், இரசாயன ஆயுதங்களை ஒழிப்பதற்கான சர்வதேச அமைப்பின் தலைவராகவும் பணியாற்றினார். யாழ்ப்பாண அரசாங்க அதிபராக அவர் பணியாற்றிய பணி பலராலும் பாராட்டப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாகப் பட்டம் பெற்ற லயனல் பெர்னாண்டோ, அக்காலத்தில் எதிரிவீர சரச்சந்திரவின் 'மனமே' நாடகத்தின் முதல் தயாரிப்பில் நடிகராக இருந்து உள்ளூர் சினிமா மற்றும் நாடகத்துறைக்கு பெரும் பங்களிப்பையும் வழங்கியுள்ளார்.
லயனல் பெர்னாண்டோ கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அபிவிருத்தியில் முதுகலைப் பட்டதாரி டிப்ளோமா பெற்றவர்.
அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து மற்றும் இலங்கையில் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.
லயனல் பெர்னாண்டோ அவர்கள் மறைந்த மூத்த நாடகக் கலைஞர் சோமலதா சுபசிங்கவின் அன்புக் கணவரும், கௌசல்யா பெர்னாண்டோ மற்றும் சியாமலிகா நாணயக்கார ஆகியோரின் தந்தையும் பேராசிரியர் சந்தன அலுத்கே மற்றும் பிரியங்கா நாணயக்கார ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அவரது பூதவுடல் ஜூலை 08ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணி முதல் ஜயரத்ன் 'Respect' மலர் நிலையத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதுடன், அன்றைய தினமே மாலை 5.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.