நெற்பயிர்கள் நாசம் – சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

டிசம்பர் 20, 2025 - 16:28
நெற்பயிர்கள் நாசம் – சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

‘டிட்வா’ சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நெற்பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதன் விளைவாக, எதிர்வரும் காலங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தக மற்றும் வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அழிவடைந்த நெற்காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டால், சிவப்பு அரிசி மற்றும் நாடு அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என அவர் குறிப்பிட்டார். எனினும், சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகள் அறுவடைக்கு சுமார் நான்கு மாதங்கள் காலம் தேவைப்படுவதால், தற்போதைய நிலையில் அவற்றை மறுபயிரிட தேவையான குறுகிய காலத்திற்குள் விளைச்சல் தரக்கூடிய விதை நெல் இனங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், நெற்செய்கை மட்டுமன்றி சோளம், நிலக்கடலை மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஏனைய பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதன்படி, சுமார் 10,000 ஹெக்டேயர் சோளப் பயிர்ச் செய்கை, 2,011 ஹெக்டேயர் நிலக்கடலைச் செய்கை மற்றும் 1,188 ஹெக்டேயர் பச்சை மிளகாய் செய்கை நாசமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, சோளம் போன்ற சில பயிர்களை இப்பருவத்தில் மீண்டும் பயிரிடுவது சாத்தியமற்ற நிலை காணப்படுவதாகவும், இதனால் எதிர்காலத்தில் சில உணவுப் பொருட்களின் விநியோகத்தில் சவால்கள் உருவாகலாம் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!