ஐரோப்பாவை சீரழித்த ‘லியோனார்டோ’ புயல்: ஸ்பெயின், போர்ச்சுக்கல் கடும் பாதிப்பு – கொலம்பியாவிலும் வெள்ளப் பேரழிவு

ஸ்பெயினின் மாலகா மாகாணத்தில் தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பெப்ரவரி 6, 2026 - 22:38
ஐரோப்பாவை சீரழித்த ‘லியோனார்டோ’ புயல்: ஸ்பெயின், போர்ச்சுக்கல் கடும் பாதிப்பு – கொலம்பியாவிலும் வெள்ளப் பேரழிவு

ஐரோப்பாவின் ஐபீரிய தீபகற்பத்தில் உள்ள ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளை ‘லியோனார்டோ’ புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் அபூர்வமான அளவில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தெற்கு ஸ்பெயினின் ஆண்டலூசியா பகுதியில் ஒரு வாரத்தில் சதுர மீட்டருக்கு 800 லிட்டர் மழை பதிவாகியுள்ளது. இது அந்த பகுதியில் பொதுவாக ஒரு ஆண்டில் பெய்யும் மழைக்கு சமமாகும்.

போர்ச்சுக்கலில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் டாகஸ் ஆற்றின் நீர்மட்டம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதனால் பல பகுதிகளில் அவசர எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுக்கலின் அலெண்டெஜோ பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய காருடன் அடித்துச் செல்லப்பட்ட 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஸ்பெயினின் மாலகா மாகாணத்தில் தனது செல்ல நாயை காப்பாற்ற முயன்ற பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கிரேஸலேமா நகரில் முழுமையான வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் ஆகிய இரு நாடுகளிலும் சேர்த்து 7,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆண்டலூசியா பகுதியில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மாலகா விமான நிலையத்துக்கு வர வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 150க்கும் மேற்பட்ட முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஸ்பெயின் வானிலை ஆய்வு மையம் ‘லியோனார்டோ’ புயலை தொடர்ந்து ‘மார்த்தா’ என்ற புதிய புயல் உருவாகி, அடுத்த வார இறுதியில் மீண்டும் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் மேலும் மழை பெய்தால் கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் அதிகரிக்கும் என அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவிலும் கனமழை காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. லா நினா காலநிலை காரணமாக ஏற்பட்ட இந்த மழையால் 32 மாகாணங்களில் 31 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கோர்டோபோ மாகாணத்தில் 70 சதவீத நிலப்பரப்பு நீரில் மூழ்கியுள்ளது. சினு மற்றும் மாக்டலேனா ஆறுகளில் ஏற்பட்ட கரை உடைப்பு காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த வெள்ளத்தால் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!