ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் நிறைவேறியது
இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.

பொலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் திருமணம் மும்பையில் உள்ள வாஸ்து இல்லத்தில் இனிதே நடந்தேறியது.
பாலிவுட்டின் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட், அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான ‘பிரம்மாஸ்திரா‘ படப்பிடிப்பின் போது பழகத் தொடங்கினர்.
இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜோடியாக முதலில் தோன்றினர். அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டது.
பாலிவுட்டின் ஜாம்பவனான ரிஷி கபூரின் மகன்தான் ரன்பீர் கபூர் இதேபோல், பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகள் தான், ஆலியா பட்.
இதனால் இவர்களது காதலுக்கு பெரிதாக எதிர்ப்பு இல்லாமல் பச்சை கொடி காட்டப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இணைந்து வந்தநிலையில், ரன்பீர் கபூர் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டே ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாவின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால், இவர்களது திருமணம் அப்போது தடைப்பட்டது.
இதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா ஊரடங்கில் திருமணத்தை அவசர அவசரமாக நடத்தும் திட்டமில்லை என்று இருவரும் அறிவித்திருந்தனர்.
அடுத்தடுத்து பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகள் தங்களது திருமணத்தை முடித்து வந்தநிலையில், அடுத்ததாக ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் திருமணத்தை பாலிவுட் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்நிலையில், மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் நேற்று மாலை, ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் இனிதே நடந்தேறியது. முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.