இலங்கையில் 850 ரூபாயாக குறையவுள்ள கோழியிறைச்சி விலை
அரசாங்கம் என்ற வகையில், உள்ளூர் உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க இன்னும் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு கிலோ கோழியிறைச்சியை உள்ளூர் சந்தையில் மக்கள் ரூ. 850 முதல் ரூ. 900 வரை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியின் விலையை உடனடியாக 200 ரூபாயால் குறைக்குமாறு கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு செய்யத் தவறினால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
எனினும், அரசாங்கம் என்ற வகையில், உள்ளூர் உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவதைத் தடுக்க இன்னும் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இன்று முதல் கோழி இறைச்சி விலையை 100 ரூபாயினால் குறைக்கவும் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் 100 ரூபாயினால் குறைப்பதற்கு உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கோழியிறைச்சி உற்பத்தியாளர்கள் 100 ரூபாயினால் மாத்திரமே சில்லறை விலையை குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் அமைச்சர் மேலும் 100 ரூபாயை குறைக்குமாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், டிசெம்பர் இறுதி வரை முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியாளர்கள் தற்போதைய முட்டை விலையை பேணுவதற்கு ஒப்புக்கொண்டால், முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.