ஆண்கள் பிங்க் ஆட்டோவில் பயணிக்கக் கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை
"பிங்க் ஆட்டோ" (Pink Auto) திட்டத்தில், ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட "பிங்க் ஆட்டோ" (Pink Auto) திட்டத்தில், ஆண்கள் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை மாநகரில் "பிங்க் ஆட்டோ" சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆட்டோக்கள் பெண்களால் இயக்கப்பட்டு, பெண்களை மட்டுமே ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
ஆட்டோக்களில் GPS கருவிகள், பதற்ற பொத்தான் (panic button) போன்ற பாதுகாப்பு அம்சங்களும் பொருத்தப்பட்டுள்ளன. பெண்களின் பயணத்தை பாதுகாப்பானதாகவும், நம்பிக்கையானதாகவும் மாற்றுவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டாகியும், பல "பிங்க் ஆட்டோக்கள்" ஆண்களையும் ஏற்றிச் செல்வதாக புகார்கள் எழுந்தன. இதனால், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பெண் பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
சில சமயங்களில், பிங்க் ஆட்டோ ஓட்டுநர்கள் பெண்களை ஏற்ற மறுத்து, ஆண்களை ஏற்றிச் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த புகார்களைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தற்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளனர்.
"பிங்க் ஆட்டோக்கள்" பெண்களுக்காக மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்றும், ஆண்கள் பயணிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிங்க் ஆட்டோக்கள் பெண்களின் பாதுகாப்பிற்காகவே தொடங்கப்பட்டவை. விதிகளை மீறி ஆண்களை ஏற்றிச் செல்லும் எந்த ஆட்டோக்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட ஓட்டுநர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.