கடவுச்சீட்டு சுட்டெண்: சிங்கப்பூர் தொடர்ந்தும் முதலிடத்தில் - இலங்கைக்கு 93ஆம் இடம்!
ஆப்கானிஸ்தான் 24 நாடுகளுக்கே முன்விசா இன்றி செல்ல முடிவதால், 101ஆம் இடத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் இலங்கைக்குக் கீழே 11 நாடுகள் மட்டுமே உள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் தரவரிசையில் இலங்கை 93ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இலங்கை கடவுச்சீட்டுடன் முன்விசா இன்றி செல்லக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை 44 இலிருந்து 39ஆகக் குறைந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு 96ஆம் இடத்தில் இருந்த இலங்கை, இவ்வாண்டு 93ஆம் இடத்திற்கு உயர்ந்திருந்தாலும், பயண அனுமதிகள் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் முன்விசா இன்றி 192 நாடுகளுக்குப் பயணிக்க முடியும். ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. மூன்றாவது இடத்தில் டென்மார்க் மற்றும் லக்சம்பர்க் உள்ளன. அவற்றின் கடவுச்சீட்டுகள் முறையே 188 மற்றும் 186 நாடுகளுக்குப் பிரவேச அனுமதியைக் கொண்டுள்ளன.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் 24 நாடுகளுக்கே முன்விசா இன்றி செல்ல முடிவதால், 101ஆம் இடத்தில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த தரவரிசையில் இலங்கைக்குக் கீழே 11 நாடுகள் மட்டுமே உள்ளன. அதேசமயம், இலங்கை கடவுச்சீட்டு இன்னும் சார்க் நாடுகளான நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது.
ஹென்லி கடவுச்சீட்டு சுட்டெண் என்பது, உலகின் கடவுச்சீட்டுகளை அவற்றின் உரிமையாளர்கள் முன்விசா இன்றி பயணிக்கக்கூடிய நாடுகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தரவரிசைப்படுத்தும் ஒரு சர்வதேச அளவுகோலாகும்.



