தீ விபத்தில் பலி 33 ஆக அதிகரிப்பு: அடையாளம் காண முடியாத நிலையில் உடல்கள்... நடந்தது என்ன?

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் என தெரியவந்துள்ளது.

மே 26, 2024 - 15:23
மே 26, 2024 - 15:24
தீ விபத்தில் பலி 33 ஆக அதிகரிப்பு: அடையாளம் காண முடியாத நிலையில் உடல்கள்... நடந்தது என்ன?

குஜராத் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேர் 16 வயதுக்கு உட்பட்டோர் என தெரியவந்துள்ளது.

சிறார்களுக்கான விளையாட்டு பொழுது போக்கு மையத்தில் கோடை விடுமுறை என்பதால் நேற்று ஏராளமான சிறுவர், சிறுமியர் வந்திருந்தனர்.

மின்கசிவு

இந்த நிலையில், மாலையில் விளையாட்டு மையத்தின் தரைத்தளத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு மேற்கொண்டார்.

ராஜ்கோட் உட்பட 8 தீயணைப்பு நிலையங்களை சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ மளமளவென பரவி விளையாட்டு மையத்தின் 4-வது மாடி வரை எரிந்தது. அத்துடன், சுமார் 5 கி.மீ. தொலைவு வரை கரும்புகை சூழ்ந்தது. 

உரிமையாளர் தலைமறைவு

இது குறித்து ராஜ்கோட் காவல் ஆணையர் ராஜு பார்கவா கூறும்போது, “டிஆர்பி பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதும் துரிதமாக மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து உள்ளனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. எனவே, மரபணு பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படும்.

தீ விபத்து தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொழுது போக்கு மையத்தின் உரிமையாளர் யுவராஜ் சிங் ஜடேஜா தலைமறைவாகிவிட்டார். அவரை தீவிரமாக தேடி வருகிறோம். ராஜ்கோட் முழுவதும் பொழுதுபோக்கு மையங்களை மூட உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

முதல்வர் உத்தரவு

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ராஜ்கோட்டில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு, நிவாரண பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். காயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ராஜ்கோட் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் படேல் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி உள்ளார். தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜ்கோட் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!